உள்ளூர் செய்திகள்

இஸ்ரோ தலைவரான கிரையோஜெனிக் கிங்

முற்றிலும் இந்தியாவில் தயாரான கிரையோஜெனிக் ராக்கெட் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய, கிரையோஜெனிக் கிங் நாராயணனுக்கு, இந்திய விண்வெளித்துறையின் உயர்பதவியான, இஸ்ரோ தலைவர் பதவியை பிரதமர் மோடி வழங்கியுள்ளார்.விண்வெளித்துறைக்கு தனி கேபினட் அமைச்சர் கிடையாது. பிரதமர் மோடியின் நேரடி கண்காணிப்பில் இந்த துறை செயல்படுகிறது. விண்வெளித்துறையின் செயலராக ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமிக்கப்படுவதில்லை.இஸ்ரோ தலைவரே விண்வெளித்துறை செயலராகவும், விண்வெளி கமிஷன் தலைவராகவும் இருப்பார். இது மாநிலத்தின் தலைமை செயலர் அந்தஸ்தில் உள்ள பொறுப்பு.இந்த உயரிய பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள நாராயணன், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மேலக்காட்டுவிளை கிராமத்தில் ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர். அரசு பள்ளியில் தமிழ் மீடியத்தில் படித்தவர்.இஸ்ரோவில், 41 ஆண்டுகளுக்கு முன் தொழில் நுட்ப உதவியாளர் என்ற கீழ்நிலை பணியில் சேர்ந்து, தற்போது திருவனந்தபுரம் எல்.பி.எஸ்.சி., மைய இயக்குனராக உள்ளார்.இஸ்ரோவின் ராக்கெட்களுக்கான உந்து இன்ஜின்கள் வடிவமைப்பது, தயாரிப்பது எல்.பி.எஸ்.சி.,யின் முக்கிய பணி. ராக்கெட்கள் விண்ணில் பாயவும், செயற்கைக்கோள்கள் சுற்றி வரவும் அடிப்படையாக அதில் நிறுவப்படும் இன்ஜின்களின் தொழில்நுட்பம் அமைந்துஉள்ளது.ரஷ்யா மறுத்த தொழில்நுட்பம்இஸ்ரோவில் பணியாற்றியபடியே, கரக்பூர் ஐ.ஐ.டி.,யில் கிரையோஜெனிக் தொடர்பாக எம்.டெக்., படித்து முதல் மாணவராக சாதனை புரிந்தார். கிரையோஜெனிக் தொடர்பாக ஆராய்ச்சி பட்டம் பெற்றார். உலக அளவில் இந்த தொழில்நுட்பத்தில் பிஎச்.டி., பெற்ற வெகு சிலரில் நாராயணனும் ஒருவர்.ராக்கெட் ஏவுவதற்கான கிரையோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்பத்தை ரஷ்யாவிடம் பெற, அப்போது அந்நாட்டிற்கு இந்தியாவால் அனுப்பப்பட்ட 20 விஞ்ஞானிகளில் ஒருவர் இவர்.கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு தர அன்று ரஷ்யா மறுத்தது. அதை சவாலாக கொண்ட சில விஞ்ஞானிகளில், நாராயணனும் ஒருவர். நீண்ட ஆராய்ச்சியின் பயனாக 2014ல் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு, உருவானது கிரையோஜெனிக் இன்ஜின்.அப்போது விஞ்ஞானிகளை பாராட்ட இஸ்ரோ வந்த பிரதமர் மோடிக்கு, இத்திட்டம் பற்றி திட்ட இயக்குனராக இருந்த நாராயணன் விளக்கினார். அதில் இருந்து பிரதமரின் கவனத்தை பெற்றார் நாராயணன்.எல்.வி.எம்.3 ராக்கெட்டில் பயன்படுத்தப்பட்ட அதிசக்தி வாய்ந்த கிரையோஜெனிக் இன்ஜின் முழுக்க நம் நாட்டில் உருவாக்கப்பட்டது. உலகில் ஐந்து நாடுகளில் மட்டுமே கிரையோஜெனிக் தொழில்நுட்பம் இருந்தது. இந்தியா அதில் ஆறாவது நாடாக சாதித்தது. இந்த தொழில்நுட்பத்தில் கிடைத்த வெற்றியே, பின்னர் சந்திரயான் விண்கலம் நிலவில் வெற்றிகரமாக கால் பதிக்க உதவியது.சந்திரயான்- 3 வெற்றிபூமியில் இருந்து நிலவுக்கு சந்திரயான் - 3ஐ கொண்டு செல்லவும், அது நிலவை சுற்றவும் மென்மையாக தரையிறங்கவும் நாராயணன் தலைமையிலான விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பே காரணம்.இதற்காக கிரையோஜெனிக் இன்ஜின் உட்பட இரண்டு இன்ஜின்கள், விண்கலத்தை நிலவுக்கு கொண்டு செல்ல உதவிய திரவ உந்துவியல் இன்ஜின், லேண்டர் நிலவில் மென்மையாக தரையிறங்க உதவிய இயந்திரம் ஆகியவற்றை சிறப்பாக வடிவமைத்து, உற்பத்தி செய்து பிரதமர் மோடியிடம் பாராட்டு பெற்றது நாராயணன் தலைமையிலான எல்.பி.எஸ்.சி.,இந்த மையத்தில் 2018 முதல், அதிக காலம் இயக்குனராக பணியாற்றியவர் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.விண்வெளியில் இந்தியா சாதிக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டுள்ள பிரதமர் மோடி, அடுத்த ஐந்தாண்டுகளில் பல்வேறு விண்வெளி திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளார். அதற்கு தகுதியாக இஸ்ரோவின் மிக சீனியரான நாராயணன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்