குடியரசுத் தலைவர் மாளிகை: மாணவியர் வியப்பு
திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவியர் நான்கு பேர், ஆசிரியர்கள் இருவருடன் டில்லி சென்று ராஷ்டிரபதி மாளிகையில் நடந்த ரக் ஷா பந்தன் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.பத்தாம் வகுப்பு மாணவியர் அக் ஷயா, கனிமொழி, ஒன்பதாம் வகுப்பு மாணவியர் பிரீத்தி, மனிஷ்கா மற்றும் உதவி தலைமை ஆசிரியர் சசிகலா, ஆங்கில ஆசிரியர் சாய்ராபானு ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். தமிழகத்தில் இருந்து இந்த பள்ளி மாணவியருக்கு மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.டில்லி சென்ற மாணவியர், பாதுகாப்பு சோதனைகளுக்குப் பின் ராஷ்டிரபதி மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்த அவர்கள், ரக் ஷா பந்தன் குறித்து அவர் பேசியதை நேரில் கேட்டனர்.தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியரிடம் தனித்தனியாக குடியரசுத் தலைவர் கலந்துரையாடினார். தமிழக மாணவியரை சந்தித்தபோது, 'ஆட்டம், கொண்டாட்டம் என்றாலே தமிழ்நாடு தானே,' எனக் கூறி மகிழ்ச்சியுடன் பேசியதாக மாணவியர் தெரிவித்தனர்.அதன்பின், ராஷ்டிரபதி மாளிகையின் பல்வேறு பகுதிகளை மாணவியர் பார்வையிட்டனர். ஆங்கிலேயர் காலத்தில் வைஸ்ராய் மாளிகையாக இருந்தது, 190 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள தோட்டங்கள், வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கான சந்திப்பு இடங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அறிந்து கொண்டனர்.'ராஷ்டிரபதி மாளிகை இவ்வளவு பெரியதாகவும், பல்வேறு வரலாற்று தகவல்களை உள்ளடக்கியதாகவும் இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்ததும், மாளிகையை சுற்றிப் பார்த்ததும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது,' என மாணவியர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.