புதுச்சேரி மாணவர்கள் கீழடி அருங்காட்சியகம் பார்வை
திருப்புவனம்: புதுச்சேரி ரவுண்ட் டேபிள், லேடீஸ் சர்க்கில் அமைப்பு சார்பில் 15 மாணவர்களை விமானத்தில் மதுரைக்கு அழைத்து வந்து, கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட செய்தனர்.சிவகங்கை மாவட்டம், கீழடியில் 2 ஏக்கரில் 2600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய 13 ஆயிரத்து 384 பொருட்களை காட்சி படுத்தியுள்ளனர். ஆறு கட்டட தொகுதிகளில் 2 தளங்களில் நவீன ஒலி, ஒளி அமைப்புடன் கூடிய பொருட்களை காட்சி படுத்தியுள்ளனர். கடந்த 2023ல் திறக்கப்பட்ட கீழடி அருங்காட்சியகத்தை காண உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். நேற்று புதுச்சேரி ரவுண்ட் டேபிள் மற்றும் லேடீஸ் சர்க்கிள் அமைப்பு சார்பில் புதுச்சேரி பாத்திமா பள்ளியில் படிப்பில் சிறந்து விளங்கும் 15 மாணவர்களை விமானத்தில் மதுரைக்கு முதன்முறையாக அழைத்து வந்துள்ளனர். அவர்கள் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர்.இது குறித்து புதுச்சேரி மாணவர்கள் கூறியதாவது, “முதன்முறையாக விமானம் மூலம் மதுரை வந்து, கீழடி தொல்லியல் அருங்காட்சியகத்தை பார்வையிட்டு மகிழ்ந்தோம்,” என்றனர்.புதுச்சேரி ரவுண்ட் டேபிள் அமைப்பு தலைவர் முரளி கூறியதாவது, “ஆண்டதோறும் படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பரிசுகள் வழங்கி வருகிறோம். இம்முறை அவர்களை விமானத்தில் மதுரைக்கு அழைத்து வந்து, கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட வைத்தோம்,” என்றார்.