மருத்துவக் கல்லூரிகளுக்கு தர நிர்ணய முறை
இதுவரை இல்லாத வகையில் முதல்முறையாக, மருத்துவம்/பல் மருத்துவம்/நர்சிங் மற்றும் அத்துறை சம்பந்தமான படிப்புகளை வழங்கிவரும் கல்லூரிகளை தர நிர்ணயத்திற்குள் உட்படுத்த, எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. மருத்துவப் பல்கலையின்கீழ் மொத்தம் 336 கல்லூரிகள் வருகின்றன. அவற்றில் 24 மருத்துவக் கல்லூரிகள், 25 பல் மருத்துவக் கல்லூரிகள், மருத்துவ அறிவியலில் இணைப்புப் பாடங்களை வழங்கும் 233 கல்லூரிகள், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி படிப்புகளை வழங்கும் 30 கல்லூரிகள், வேறு 16 கல்லூரிகள் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட துணைப் பாடங்களில் சான்றிதழ் படிப்புகளை வழங்குவதற்கு பயிற்சியளிக்கப்பட்ட மருத்துவமனைகள் உள்ளிட்ட சில நிறுவனங்களும் இந்த எண்ணிக்கையில் அடக்கம். இந்த தர நிர்ணயத்தில், ஒரு குறிப்பிட்ட கல்லூரியின் புகழ், பாடத்திட்டத்தின் தரம், மாணவர் மீதான கவனிப்பு, உள்கட்டமைப்பு மற்றும் அக்கல்லூரியில் சேரும் வாய்ப்புகள் ஆகிய அம்சங்களுடன், தேர்ச்சி விகிதம், அங்குள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி, ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தல்கள், உணவக வசதிகள் மற்றும் வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களுடன் கொண்டுள்ள ஒப்பந்தங்கள் போன்றவையும் கணக்கில் எடுக்கப்படும். இப்பணியை, தொழில்முறையிலும், குறிக்கோளை தக்கவைத்துக் கொள்ளும் வகையிலும் செய்ய, சந்தை ஆய்வு பணிகளை மேற்கொள்ளும் நியல்சன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதேசமயத்தில் பல்கலை நிபுணர்களும், பணியாளர்களும் இப்பணி சம்பந்தமாக அந்நிறுவனத்திற்கு தொடர்ந்து ஆலோசனை வழங்குவார்கள். இந்தப் பணியானது 3 கட்டங்களில் நடைபெறும். முதல் கட்டத்தில் மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளும், இரண்டாம் கட்டத்தில் நர்சிங் கல்லூரிகளும், மூன்றாம் கட்டத்தில் பார்மசி மற்றும் பிசியோதெரபி கல்லூரிகளும் இடம்பெறும். முடிவில் அனைத்துக் கல்வி நிறுவனங்களைப் பற்றிய மதிப்பீடுகளும் சமர்ப்பிக்கப்படும். இந்த ஆய்வில் தனிப்பட்டக் கல்லூரிகளும் மதிப்பிடப்படும். அடுத்தக் கல்வியாண்டு தொடங்குவதற்குள் இந்தப் பணிகள் முடிந்துவிடும். இந்த ஆய்வின்மூலம் தரக்குறைபாடு கண்டுபிடிக்கப்படும் கல்வி நிறுவனங்களுக்கு மேம்படுத்திக்கொள்ள வாய்ப்புத் தரப்படும். அந்த வாய்ப்பை அந்நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லையெனில், அங்கீகாரம் ரத்துசெய்யப்படும் என்று சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்தன. பொறியியல் கல்லூரிகளுக்கு இதுபோன்ற தர மதிப்பீடுகள் பல வருடங்களாகவே புழக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மருத்துவ கல்லூரிகளுக்கும் இந்த நடைமுறை கொண்டுவரப்படுவதால், மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் நன்மை ஏற்படும் என்று கூறப்படுகிறது.