உள்ளூர் செய்திகள்

சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வு: 1,215 மாணவர்கள் பங்கேற்பு

உடுமலை: வரும் கல்வியாண்டில், உடுமலை அமராவதி நகர் சைனிக் பள்ளியில் ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வில், தமிழகம் முழுவதும் 1,215 மாணவர்கள் பங்கேற்றனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை அமராவதி நகர் சைனிக் பள்ளியில், 2011-2012ம் கல்வியாண்டில் 6 மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம் வினியோகிக்கப்பட்டன. இதற்கான நுழைவுத்தேர்வு, மாநிலம் முழுவதும் நேற்று நடந்தது. ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கான நுழைவுத்தேர்வு ஏழு மையங்களிலும், ஒன்பதாம் வகுப்புக்கு இரண்டு மையங்களிலும் நடந்தன. திருநெல்வேலி மையத்தில் 20 பேரும், புதுச்சேரியில் 33; திருச்சியில் 59, சேலம் 67, மதுரை 65, சென்னை 125, அமராவதிநகர் சைனிக் பள்ளியில் 375 என, மொத்தம் 744 பேர் ஆறாம் வகுப்புக்கான நுழைவுத் தேர்வு எழுதினர். ஒன்பதாம் வகுப்பு சேர்க்கைக்காக நடந்த நுழைவுத் தேர்வில் சென்னையில் 153 பேர், அமராவதி நகரில் 318 பேர் என, மொத்தம் 471 பேர் எழுதினர். அமராவதி நகர் சைனிக் பள்ளியில் நடந்த நுழைவுத் தேர்வில், 40 ஆசிரியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு அடுத்த கட்டமாக மருத்துவ சோதனையும், நேர்காணலும் நடைபெறும். இத்தகவலை சைனிக் பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்