உறைவிடப்பள்ளியில் இருந்து தப்பிய 2 மாணவர்களை மீட்ட போலீசார்
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை சந்தை மேடு பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உறைவிடப்பள்ளி இயங்கி வருகிறது. பள்ளியில் ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியர் மற்றும் விடுதி காப்பாளராக வனஜா பணியாற்றி வருகிறார்.பள்ளியில் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தொலுமலை, காட்டுநாயக்கன் தொட்டி பகுதியை சேர்ந்த, 10 வயது மாணவர்கள் இருவரும் படித்து வந்தனர். அவர்கள் நேற்று அதிகாலை பள்ளியிலிருந்து தப்பினர். நேற்று காலை மாணவர்கள் வருகை சரிபார்த்த போது மாணவர்கள் தப்பியது தெரிந்தது.மாணவர்களின் பெற்றோர் தேன்கனிக்கோட்டை போலீசில் புகாரளித்தனர். போலீசார் உறைவிடப்பள்ளி மற்றும் அப்பகுதி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது மாணவர்கள் சுவர் ஏறி தப்பியதும், தேன்கனிக்கோட்டை பகுதியில் சுற்றி திரிவதும் தெரிந்தது. மாணவர்களை மீட்ட போலீசார் அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.