உலக பல்கலை தரவரிசை பட்டியலில் 4 இந்திய கல்வி நிறுவனங்களுக்கு இடம்
லண்டன்: உலக பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசையில் முதல் 500 இடங்களில் நான்கு இந்திய கல்வி நிறுவனங்கள் இடம்பெற்று உள்ளன.உலக பல்கலைகளுக்கான தரவரிசை பட்டியலை, பிரிட்டனைச் சேர்ந்த, 'டைம்ஸ் ஹையர் எஜுகேஷன்ஸ்' என்ற பத்திரிகை, 'உலக பல்கலைக்கழக தரவரிசை 2026' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது. இதில், 115 நாடுகளைச் சேர்ந்த 2,191 கல்வி நிறுவனங்களை தரவரிசைப்படுத்தியுள்ளது.முதல் 100 இடங்களுக்கு மட்டும் தனியாகவும், 100க்கு மேல் உள்ள நிறுவனங்களை தரவரிசை குழுவாகவும் பிரித்துள்ளது. உலகின் சிறந்த பல்கலையாக, பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு தொடர்ந்து, 10வது ஆண்டாக தன் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது.உலகளவிலான பல்கலைகளுக்கான தரவரிசை பட்டியலில், முதல் 500 இடங்களில் இந்தியாவைச் சேர்ந்த நான்கு கல்விநிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன.பெங்களூரைச் சேர்ந்த ஐ.ஐ.எஸ்., எனப்படும் இந்திய அறிவியல் கழகம், உலகளவிலான தரவரிசையில் 201 முதல் 250 வரையிலான இடங்களில் இடம்பெற்ற ஒரே இந்திய கல்வி நிறுவனமாக உள்ளது.இதையடுத்து, 351 முதல் 400 வரையிலான தரவரிசையில், தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்த சவீதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் இடம் பிடித்துள்ளது.புதுடில்லியைச் சேர்ந்த ஜாமியா மிலியா இஸ்லாமியா கல்வி நிறுவனமும், ஹிமாச்சல பிரதேசம் பஜோலைச் சேர்ந்த ஷுலினி உயிரி தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை கல்வி நிறுவனமும், 401 முதல் 500 இடங்களுக்கான பிரிவில் இடம் பிடித்துள்ளன.மேலும், 601 முதல் 800 வரையிலான தரவரிசை பிரிவில், தமிழகத்தின் வேலுார் வி.ஐ.டி., பல்கலை உட்பட, 15க்கும் மேற்பட்ட இந்திய கல்வி நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன.