மாநகராட்சி பள்ளிகளுக்கு மவுசு கூடுகிறது
சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில், எப்போதுமில்லாத வகையில் மாணவர் சேர்க்கை இந்த கல்வி ஆண்டில் உயர்ந்து வருகிறது. ஜூன் 1 முதல், மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது. கடந்த 13 நாள்களில், 5 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் சேர்ந்துள்ளனர். கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் ஜூன் 15ம் தேதி திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளதால், மாணவர் சேர்க்கை இன்னும் அதிகரிக்கும் என மாநகராட்சி கல்வி அலுவலர்கள் கூறுகின்றனர்.மாணவர் சேர்க்கையை மாநகராட்சி அறிவித்ததோடு நின்றுவிடாமல், மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்கள், தங்கள் பகுதிக்கு உட்பட்ட குடியிருப்புகளுக்குச் சென்று, மாநகராட்சிப் பள்ளிகளின் வசதிகள், தரம், கல்விக்கு மாநகராட்சி அளிக்கும் ஊக்கம் ஆகியன குறித்து பெற்றோருக்கு எடுத்துச் சொல்லி மாணவர் சேர்க்கையை அதிகரித்து வருகின்றனர். மாநகராட்சிப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் முத்துலட்சுமி கூறும்போது,"ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வரைபடம், நோட்டுப் புத்தகம், பென்சில் பெட்டி, சீருடை, ஷூ ஆகியன இலவசமாக வழங்கப்படுகின்றன. மாநகராட்சிப் பள்ளிகளில், தமிழ் வழிக் கல்வியோடு, ஆங்கில வழிக் கல்வியும் உள்ளது. ஆங்கிலம், கணிதம் ஆகியவற்றுக்கு ஆய்வுக் கூடங்கள் உள்ளன. மாநகராட்சி ஆற்றல்சார் பள்ளிகளில் அபாகஸ் பயிற்சி அளிக்கப் படுகிறது என பெற்றோர்களிடமும், மாணவர்களிடமும் எடுத்துச் சொல்லி, அவர்களை மாநகராட்சிப் பள்ளிகளில் சேர்க்கிறோம்&' என்றார். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களை மையமாகக் கொண்டு மாநகராட்சிப் பள்ளிகள் இயங்கினாலும், 2010-2011 கல்வி ஆண்டில், 10ம் மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநகராட்சிப் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் 86 சதவீதம் என்பதால், வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்களும் மாநகராட்சிப் பள்ளிகளை நாடி வரும் நிலை ஏற்பட்டு உள்ளது. "பாடத்திட்ட கல்வி" மட்டும் அல்லாமல், தொழில் கல்விக்கான பயிற்சிகளும் மாணவர்களுக்கு அளிக்கப்படுவது, மாநகராட்சிப் பள்ளிகளை பெற்றோர்கள் விரும்புவதற்கு கூடுதல் பலமாக உள்ளது. விற்பனை, சேவை, ஆங்கிலம், ஆய்வக உடனாளர், வினையல் பலகை தயாரிப்பு, சில்லறை விற்பனை போன்றவற்றுக்கு பயிற்சி அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும், மாநகரில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப, ஏர் கண்டிஷன் மற்றும் பிரிஜ் மெக்கானிசம், லிப்ட் பழுதுபார்த்தல் ஆகிய பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாநகராட்சி நிர்வாகத்தில் 36 உயர்நிலைப் பள்ளிகளும், 32 மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. இவற்றில் சேர மாணவர்கள் ஆர்வம் அதிகமாக உள்ளனர். சேர்க்கையை உறுதி செய்வதற்காக, அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் சிபாரிசு கடிதங்களுடன் மாணவர்கள் வருவதாக மாநகராட்சி கல்வி அதிகாரி ஒருவர் கூறினார். மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து மேயர் சுப்ரமணியன் கூறும்போது, "கடந்த ஆண்டைக் காட்டிலும், நடப்புக் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை சிறப்பாக உள்ளது. மாணவர்களுக்கு மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவித்துள்ள இலவச நோட்டு புத்தகங்கள், ஷூ, சீருடை போன்ற திட்டங்கள் நடப்பாண்டிலும் தொடரும்" என்றார்.