இரண்டாம் இடத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
ஜுலை 8ம் தேதி முதல் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொதுப் பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. 3வது நாளான ஜுலை 10ம் தேதி மொத்தம் 3,097 மாணவர்கள் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டிருந்தனர். அதில் 436 மாணவர்கள் வரவில்லை. 7 மாணவர்கள் தாங்கள் விரும்பிய பாடப்பிரிவு கிடைக்காததால் திரும்பிச் சென்றுவிட்டனர். மீதமிருந்த 2654 மாணவர்கள் பொறியியல் பாடப்பிரிவை தேர்வு செய்து அதற்கான ஆணையைப் பெற்றுக் கொண்டனர். 2654 மாணவர்களில் 648 மாணவர்கள் எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பாடப்பிரிவை தேர்வு செய்துள்ளர். முதல் நாளில் இருந்தே எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பாடப்பிரிவினை ஏராளமானோர் தேர்வு செய்தனர். கடந்த 3 நாட்களில் 1,484 மாணவர்கள் இந்த பிரிவை தேர்வு செய்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கையும் (937), கம்ப்யூட்டர் சயின்ஸ் அன்ட் இன்ஜினியரிங்கையும் (869) அதிகமான மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். ஜுலை 1ம் தேதி முதல் நடந்த பொறியியல் படிப்பிற்கான தொழிற்பிரிவு கலந்தாய்வில் ஏராளமான மாணவர்கள் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடப்பிரிவை தேர்வு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.