உள்ளூர் செய்திகள்

தமிழே, உலகின் மூத்த மொழி!

சென்னை: &'உலகத்தில் மூத்த மொழியாக தமிழ் விளங்கிக்கொண்டிருக்கிறது&' என்று கம்பன் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் கூறினார். கம்பன் கழகத்தின் 37ம் ஆண்டு விழா சென்னையில், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் ஏ.வி.எம்.ராஜேஸ்வரி மண்டபத்தில் துவங்கி நடந்து வருகிறது. ஆகஸ்ட் 15ம் தேதி வரை இவ்விழா நடக்கிறது. இவ்விழாவை துவங்கி வைத்து குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசும்போது, &'தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை கம்ப ராமாயணம். கம்ப ராமாயணம் எழுதப்பட்ட விதமும், சொல்லப்பட்ட நீதிகளும் மக்களை ஈர்க்கும் விதமாகவும், நெகிழ வைக்கும் விதமாகவும் உள்ளன. எப்படி வாழவேண்டும், எந்த நீதிகளை பின்பற்ற வேண்டும் என்பதையும் மிகத்தெளிவாக சொல்லப்பட்டுள்ளது&' என்றார்.விழாவில் கலந்து கொண்டு கம்பன் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் பேசியதாவது: கம்பன் கழகம் ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து கொண்டிருக்கிறது. கம்பன் கழகம் வளர்ந்து வருவதற்கு முக்கிய காரணம் கம்பன் அடிப்பொடி காரைக்குடி சா.கணேசனும், முன்னாள் நீதிபதி எம்.எம்.இஸ்மாயிலும் தான். கம்பனின் பெருமைகளை நாடு முழுவதும் கம்பன் கழகத்தினர் பரப்பிக்கொண்டிருக்கின்றனர். கம்பன் கழக விழா ஆண்டுக்கு மூன்று நாட்கள் ஏ.வி.எம். ராஜேஸ்வரி மண்டபத்தில் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானலும் நடத்திக்கொள்ளுங்கள் என்று ஏ.வி.மெய்யப்ப செட்டியார் சொல்லிச்சென்றார். கம்பன் கழகம் வளர்வதற்கு ஆக்கமும், ஊக்கமும் தந்தவர் செட்டியார். ராமாயணத்தை இறைவனுக்காக மட்டும் கம்பன் படைக்கவில்லை. தமிழ் சிறப்பாக வாழவேண்டும், வளரவேண்டும் என்பதற்காகவும் இலக்கியமாக படைத்தார். ராமாயணப் படைப்பின் நோக்கம் இலக்கிய வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறது. தமிழ், இந்நாட்டில் பெருமக்களால் பேசப்படும் மொழிமட்டுமல்ல, உலகத்தில் மூத்த மொழியாக தமிழ் விளங்கிக் கொண்டிருக்கிறது. விசுவாசத்துடன் ஏராளமானோர் தமிழை வளர்த்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு ஆர்.எம்.வீரப்பன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்