உள்ளூர் செய்திகள்

என்ன சொல்கிறோமோ அதுவாக ஆகிறார்கள்

இல்லை என்றுதான் பலரும் கூறுவார்கள். மற்றவர்களிடம் என் குழந்தையைப் பற்றி கூறுவதற்கு ஏன் இவ்வளவு யோசிக்க வேண்டும் என்றும் கேட்பார்கள். அவர்களுக்கெல்லாம் ஒரே பதில் ஆம்.. அதிகமாக யோசிக்க வேண்டிய விஷயம்தான் இது. ஏன் என்றால், மற்றவர்களிடம் உங்கள் குழந்தையை என்னவாகக் கூறுகிறீர்களோ அதுவாகவே அவர்கள் ஆகிறார்கள் என்பதுதான் நிஜம். ஒரு குழந்தையின் தாய், அவர்களுக்கு தெரிந்தவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, இவளா.. ரொம்ப அடம், எதைக் கேட்டாலும் உடனே வாங்கித் தர வேண்டும் என்று கூறினால், இதனைக் கேட்கும் குழந்தையின் மனதில் இந்த விஷயம் பதிந்துவிடும். அதேப்போல, கேட்பவருக்கும் இது பதிந்து விடும். ஒரு வேளை அந்த குழந்தை அவர்கள் வீட்டிற்குச் சென்று ஏதேனும் கேட்டால் கூட, உங்க அம்மா அப்பவே சொன்னார், நீ அடம்பிடிப்பாய் என்று கூறி விட்டு பிறது அதை செய்து கொடுப்பார். அது வரை குழந்தை கேட்டாலும், சொன்னாலும் இயல்பான விஷயமாக இருந்தது, இன்று குழந்தையின் தாய் குறிப்பிட்ட ஒரு விஷயத்தால் ஒவ்வொரு செயலும் முக்கியமாக கவனிக்கப்படுகிறது. அதேப்போலத்தான், பிள்ளையும், அடம்பிடித்தால் கேட்டது கிடைக்கும் என்று எதற்கெடுத்தாலும் அடம்பிடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும். எனவே, உங்கள் பிள்ளைகளைப் பற்றி நல்ல குணங்களை மட்டும் பகிர்ந்து கொள்ளுங்கள். பிள்ளைகள் இல்லாத சமயத்தில் நீங்கள் கூறும் கருத்துக்களும் கூட உங்கள் குழந்தையின் குணநலனில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய உண்மை. அதேப்போல, அதிகமாக குறும்பு செய்யும் ஒரு குழந்தையைப் பற்றி நீங்கள் அடிக்கடி பேசினீர்கள் என்றால், சமத்தாக இருக்கும் மற்றொரு குழந்தையும், நாமும் குறும்பு செய்தால்தான் நம்மைப் பற்றி அம்மா பேசுவார்கள் என்று நினைத்து அதிகமான குறும்புத்தனங்களை செய்யும். எனவே, நம் குழந்தைகளைப் பற்றிய நல்ல விஷயங்களையும், அவர்கள் செய்யும் சின்ன சின்ன வேலைகளையும் பாராட்டிப் பேசுங்கள். அதற்காக பாராட்டையும் அளவாகவே செய்ய வேண்டும். அதிகமாகப் புகழப்படும் குழந்தைகள் நாளடைவில் அதற்கு அடிமையாகி, தன்னை பாராட்டிப் பேசினால் எதையும் செய்யும் அளவிற்கு போகும் நிலையும் ஏற்படலாம். எனவே, குழந்தைகளை மற்றவர்கள் முன்பு அதிகம் விமர்சிக்க வேண்டாம். அவர்களை அவர்களாக வளர விடுவோம். அவர்களை அழகான பூந்தோட்டமாக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு முள்செடியாக்கிவிட வேண்டாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்