நமது பல்கலை பாடத்திட்டங்கள் பின்தங்கியுள்ளன
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய பெங்களூரில் உள்ள தயானந்த்சாகர் நிறுவனத்தின் ஆராய்ச்சித் துறை தலைவர் பேராசிரியர் டாக்டர் சுமா தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், தகவல் தொழில்நுட்பத்துறையில் ஏராளமான அளவில் வேலைவாய்ப்புகள் காத்துக் கிடக்கின்றன. உங்களுடைய சாதனைகள் இந்தியாவை உயர்த்துவதாக இருக்க வேண்டும். சர்வதேச தரத்தில் இருந்து பல்கலைக்கழக பாடத்திட்டங்கள் 5 ஆண்டுகள் பின்தங்கியுள்ளன. ஆண்டு ஒன்றுக்கு சுமார் 3 மில்லியன் பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி மாணவர்கள் கல்வி நிறுவனங்களில் இருந்து படித்து முடித்து வெளியேறுகின்றனர். இதில் 25 சதவீதத்தினர் மட்டுமே பொறியியல் பட்டதாரிகள். அதுபோன்ற பொறியியல் பட்டதாரிகளிடம் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தனித்துவத்தையும், குறிப்பாக புதிய கண்டுபிடிப்புகளில் உங்களுக்கு உள்ள ஆர்வத்தையும் அதிகளவில் எதிர்பார்க்கின்றன. தலைமைப் பண்பு, ஆய்ந்தறிந்தல், தொழில்நுட்பத்தில் போட்டியிடும் தன்மை, மொழித்திறன், ஆளுமைத்திறன் போன்றவற்றை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். தொழில்நுட்பத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் அதி விரைவாக ஏற்பட்டு வருவதை நீங்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். ஆராய்ச்சி துறையில் உங்கள் திறனை வளர்த்துக் கொள்வதோடு, நட்பு வட்டாரத்தையும் விரிவுபடுத்திக் கொள்ள வேண்டும். இந்தியர்கள் உலகளவில் உயர்ந்த பதவிக்கு வருவது பெருமை தருகிறது. நிறுவனங்கள் அவர்கள் செலவில் உங்களுக்கு கூடுதல் பயிற்சி தந்து திறனை வளர்க்க தயாராய் உள்ளன. சமூகத்தில் ஏற்படப்போகும் மிக பெரிய மாற்றங்களுக்கு அறிவியலிலும், பொறியியல் துறையிலும் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளே காரணிகளாக அமையும் என்று கூறினார்.