புதுச்சேரியில் தேசிய நுாலக மாநாடு
புதுச்சேரி: புதுச்சேரியில் தேசிய நுாலக மாநாடு, நாளை (9ம் தேதி முதல்) மூன்று நாட்கள் நடக்கிறது. புதுச்சேரி, பிரெஞ்சு இன்ஸ்டியூட், டில்லி டெல்நெட் நிறுவனத்துடன் இணைந்து, அறிவு வளர்ச்சி, நுாலகவியல் மற்றும் தகவல் கூட்டமைப்பு என்ற தலைப்பில், மூன்று நாட்கள் மாநாடு, புதுச்சேரி ஆனந்தா இன் ஓட்டலில் நடத்தப்படுகிறது. இதுகுறித்து, டெல்நெட் இயக்குனர் எச்.கே.கவுல் கூறியதாவது: சமுதாய வளர்ச்சிக்கு, நுாலகங்கள் அடிப்படையானவை. அனைத்து நுாலகங்களையும் ஒருங்கிணைத்து, மையப்படுத்துதல், மின்மயமாக்கல், நுாலகங்களை எளிமையாக்குதல் என்ற நோக்கத்தில், மூன்று நாட்கள் மாநாடு நடத்தப்படுகிறது. நாளை காலை 10:00 மணிக்கு, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், மாநாட்டை துவக்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார். பிரெஞ்சு ஆய்வு நிறுவன இயக்குனர் பெர்ரிகார்ட் தலைமை தாங்குகிறார். மாநாடு, நுாலகங்களுக்கு இடையே தொடர்பை உருவாக்கவும், நுாலகத் தகவல் பரிமாற்றத்தையும் மையப்படுத்தி அமையும். இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் நாடுகளில் இருந்து, 350க்கும் மேற்பட்ட அறிஞர்கள், மாணவர்கள் பங்கேற்கின்றனர். நுாலக பயன்பாடு குறித்த கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, எச்.கே.கவுல் கூறினார்.