உள்ளூர் செய்திகள்

சிந்தனைத்திறன் இருந்தால் அனிமேஷனில் சாதிக்கலாம்!

மதுரை: சிந்தனைத்திறன் உள்ள மாணவர்கள் அனிமேஷன் (அசை வரைகலை) துறையை தேர்வு செய்து சாதிக்கலாம், என, கும்பகோணம் கவின்கலை கல்லுாரி முதல்வரும், பிரபல ஓவியருமான மனோகரன் தெரிவித்தார்.மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியியல் கல்லுாரியில், அனிமேஷன் துறை சார்பில், சர்வதேச அனிமேஷன் தின விழா -2015&' நேற்று துவங்கியது. கல்லுாரித் தலைவர் டாக்டர் ஆர். லட்சுமிபதி தலைமை வகித்து பேசியதாவது: ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் படிக்கும் மாணவர்கள், 10 சதவீதம் பேர் மட்டுமே வேலைக்கு தகுதி உள்ளவர்களாக வெளியேறுகின்றனர். வேலை வாய்ப்பு இல்லாததால், பட்டம் முடித்தும் பலர் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தான் படிக்கும் போதே வேலை வாய்ப்புகளை அளிக்கும் படிப்புகள் மட்டும், இக்கல்லுாரியில் அளிக்கப்படுகின்றன. இங்கு படிப்பை முடிக்கும் மாணவர்கள் வெளியில் செல்லும்போது வேலையுடன் செல்ல வேண்டும் என்பதே கல்லுாரியின் நோக்கம், என்றார். மனோகரன் பேசியதாவது: வேலைவாய்ப்பு கொடுக்கும் படிப்புகளை தேடிச் சென்று படிக்க வேண்டும். அனிமேஷன் துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. சினிமா துறையில்சாதிக்கும் பலர், மதுரை மண்ணை சேர்ந்தவர்கள். சிந்தனைத்திறன் இருந்தால் போதும் இத்துறையில் கொடிகட்டிபறக்கலாம். மாணவர்கள் கற்பனை திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். கல்வி நிறுவனங்களும் அவர்கள் கற்பனை திறனை துாண்டிவிட வேண்டும், என்றார். அனிமேஷன் துறை தலைவர் திருநாவுக்கரசு வரவேற்றார். நிர்வாக மேலாண்மையர் ராம்குமார், முதல்வர் ராம்நாத், ராஜன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் பார்த்தசாரதி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்