கல்வி கட்டண தொகை வழங்கல்
திருப்பூர்: நர்சரி பள்ளிகளில், ஏழை மாணவர் சேர்க்கைக்கான கல்வி கட்டண தொகை வழங்கும் பணி துவங்கியுள்ளது. இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில், 25 சதவீத இட ஒதுக்கீட்டில் ஆண்டுதோறும் ஏழை மாணவர் சேர்க்கை நடக்கிறது. 2013-14 மற்றும், 14-15ம் கல்வி ஆண்டுகளில், நர்சரி பள்ளிகளில் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கு, கல்வி கட்டணம் வழங்க, தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. திருப்பூர் மாவட்டத்துக்கு, 1.24 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பள்ளிகள் வாரியாக, மாணவர் எண்ணிக்கை அடிப்படையில், தொகை வழங்கும் பணி துவங்கியுள்ளது. கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், நர்சரி பள்ளிகளில், ஏழை மாணவர் சேர்க்கை திட்டத்தில், பள்ளிகளுக்கு சேர வேண்டிய அரசின் கல்வி கட்டண தொகை, மூன்று பிரிவுகளாக விடுவிக்கப்பட்டுள்ளது; பள்ளிகள் விவரம், மாணவர் எண்ணிக்கை, வங்கி கணக்கு எண், ஐ.எப்.எஸ்.சி., எண் போன்றவை சேகரிக்கப்பட்டு, செயலகத்துக்கு அனுப்பப்பட்டது. தற்போது, சில பள்ளிகளுக்கு அத்தொகை வரவாகியுள்ளது; பிற பள்ளிகளுக்கும், ஒரு வாரத்துக்குள் வரும் என்றார்.