தியேட்டர்களிடம் முகாமிடும் பள்ளி மாணவர்கள்!
ஓசூர்: தமிழகம் முழுவதும், மார்ச் மாதம் பொதுத்தேர்வு நடக்க இருக்கும் நிலையில், ஓசூர் பகுதி அரசு பள்ளி மாணவர்கள், தியேட்டர்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், ஒரு மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனால், சனிக்கிழமைகளில் பள்ளிக்கூடங்களை திறந்து, கூடுதல் நேர வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கனமழை காரணமாக, மார்ச் மாதம் நடக்க வேண்டிய பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி தள்ளி போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வரும் மே மாதத்திற்குள் சட்டசபை தேர்தல் நடக்கும் என்பதால், பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே, வழக்கம் போல், மார்ச் மாதம் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வை நடத்த பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு நெருங்கி விட்டதால், ஓசூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளில் நடத்தப்படும் சிறப்பு வகுப்புகளை மாணவர்கள் பெரும்பாலோனார் புறக்கணித்து வருகின்றனர். அத்துடன் பள்ளி நேரங்களில் சீருடையுடன், சினிமா தியேட்டர் நோக்கி படையெடுப்பது தொடர் கதையாக உள்ளது. இது குறித்து ஓசூர் பகுதி மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் கூறியதாவது: தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடத்தும் போது, மாணவர்கள் பள்ளிக்கு செல்லாவிட்டால், பெற்றோருக்கு தகவல் வந்து விடுகிறது. ஆனால், அரசு பள்ளி மாணவர்கள், வீட்டில் இருந்து சிறப்பு வகுப்புக்கு செல்வதாக கூறி விட்டு, பள்ளிக்கு செல்கிறாரா அல்லது வகுப்புகளை கட் அடித்து விட்டு சினிமாவிற்கு செல்கிறாரா என்பது பெற்றோருக்கு தெரிவதில்லை. பொதுத்தேர்வு நெருங்கி வருவதால், சிறப்பு வகுப்பு நடத்தும் அரசு பள்ளி ஆசிரியர்கள், அந்தந்த மாணவனின் பெற்றோரின் முழு விபரம், மொபைல் போன் நம்பர் ஆகியவற்றை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் பள்ளி மற்றும் சிறப்பு வகுப்பிற்கு வராத பட்சத்தில், பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.