ஓட்டுச்சாவடி தூதுவர்களாக கல்லூரி மாணவர்கள்
மதுரை: மதுரை மாவட்ட ஓட்டுச்சாவடி துாதுவர்களாக கல்லுாரி மாணவர்களை நியமிப்பது குறித்து கலெக்டர் கே.வீரராகவ ராவ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஒ., வேலுச்சாமி, கூடுதல் கலெக்டர் ரோகிணி, பயிற்சி கலெக்டர் கில்லி சந்திரசேகர் மற்றும் பலர் பங்கேற்றனர். பிறகு கலெக்டர் கூறியதாவது: ஓட்டுச்சாவடிகளில் கல்லுாரி மாணவ, மாணவியர்கள் வளாக துாதுவர்களாக செயல்படவுள்ளனர். கல்லுாரி என்.சி.சி., சாரணர் இயக்க மாணவர்கள் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் எண் ஆகியவற்றுடன் முகவரி சான்றிதழ்களை இணைத்து, கல்லுாரி இணை இயக்குனர் மூலம் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் உரிய அனுமதி பெற வேண்டும். கல்லுாரிகளில் பயிலும் 18 வயதிற்கு மேல் உள்ளவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என ஆய்வு செய்து, அதற்கான ஆவணங்களை பெற்று தேர்தல் அலுவலரிடம் சமர்ப்பித்து அவர்களும் ஓட்டளிக்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும், என்றார்.