கிராமத்து மாணவர்களின் அபாய பயணம்
பின்தங்கிய ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயம் வெற்றி பெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கிராமப்புறங்களில் கல்வி வளர்ச்சி ஏற்படும் பட்சத்தில் வேலை வாய்ப்பு மூலம் வறட்சியை சமாளிக்கலாம் என்ற நிலை உள்ளது. ஆனால் கிராமப்புற மாணவர்களின் இன்றைய நிலை சொல்ல முடியாத அளவுக்கு சோகமாக உள்ளது. போதிய பஸ் வசதி இல்லாமல் கிடைத்த பஸ்சில் முடிந்த வரை தொற்றிக்கொண்டு அபாய பயணம் மேற்கொள்ள வேண்டிய அவல நிலை உள்ளது. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராம மாணவர்கள் இதே நிலையில் தான் இன்று உள்ளனர். ஊராட்சி தலைவரிடமிருந்து தமிழக முதல்வர் வரை மனு அளித்து பணம் செலவு செய்தது தான் பாக்கி. தீர்வு கிடைத்ததா என்றால் இல்லை. இதனாலேயே தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப கிரமத்து பெற்றோர்கள் பலரும் தயாராக இல்லை. இதுவே கிராமத்து மாணவர்கள் உயர்கல்வி பாதிக்க முக்கிய காரணமாகவும் உள்ளது. மாணவர்களுக்கே இந்த நிலை என்றால் மாணவிகள் நிலையை சொல்லி தெரியவேண்டியதில்லை. 10 பேர் கூட அமர்ந்து செல்ல பயனற்ற நிலையில் இருக்கும் பஸ்சில் நூற்றுக்கணக்கானோர் பயணிக்கின்றனர். அதில் பெரும்பாலானோர் மாணவர்கள் தான். லேசாக சாய்ந்தால் கூட கூடையில் சரிந்த பழங்களின் நிலை தான் அவர்களுக்கு. இடமின்றி பஸ்சின் மேற்கூரையில் அமர்ந்து செல்லும் மாணவர்களுக்கு தாழ்வாக செல்லும் மின்வயர்கள் சிம்மசொப்பனமாக இருக்கின்றன.டிரைவரோ, நடத்துனரோ, கல்வி அதிகாரிகளோ, மாவட்ட அதிகாரிகளோ இதை பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை. இது வரை விபரீதம் எதுவும் நடக்க வில்லை என்பதால் தான் அனைவரும் மவுனம் சாதிக்கின்றனரோ என்ற எண்ணம் தோன்றுகிறது. இதே நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் மாவட்டத்தில் உள்ள கிராம மாணவர்களுக்கு உயர் கல்வி என்பது எட்டா கனியாக மாறும் என்பது மட்டும் உறுதி.