உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு தேவை கண்டிப்பா, தண்டிப்பா

சென்னை, அமைந்தகரை அய்யாவு காலனியில் தமிழ்க் கோட்டம் அமைந்துள்ளது. இங்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் க.ப.அறவாணன் தலைமையில், இன்றைய மாணவர்களை நல் வழிப்படுத்த தேவை கண்டிப்பா, தண்டிப்பா என்ற தலைப்பில் தமிழ் ஆர்வலர்கள், பேராசிரியர்கள், முனைவர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தினர்.கூட்டத்தில் சமச்சீர் கல்வி, மொழிப்பாடம், உயர்கல்வியில் மொழிப்பாட மதிப்பெண் தகுதி, ஆசிரியர்களின் பயிற்று முறை, விடைத்தாள் திருத்தும் முறை ஆகியன குறித்து கருத்தாளர்கள் தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர்.மேலும் கடந்தகால கல்வி முறை, தற்கால கல்வி முறை, கடந்த கால ஒழுக்கம், தற்கால ஒழுக்கம், கடந்தகால வளர்ப்பு முறை, தற்கால வளர்ப்பு முறை, கடந்த கால ஆசிரியர் நிலை, தற்கால ஆசிரியர் நிலை, கடந்த கால மாணவர் நிலை, தற்கால மாணவர் நிலை குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.விவாதத்தில் முடிவாக மாணவர்களை நல்வழிப்படுத்தவும், அவர்களை மேம்படுத்தவும் தேவையான அளவு கண்டிப்பும், தண்டிப்பும் அவசியம் என்று பெரும்பாலானோர் கருத்து தெரிவித்தனர். அந்த தண்டிப்பு என்பது தனிப்பட்ட முறையிலான விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில் இல்லாமல், தனிப் பட்ட மாணவர்களின் தேவைக்கு ஏற்ப இருக்க வேண்டும். அவர்கள் உண்மை நிலையை உணர்ந்து செயல்படுவதற்கு தகுந்த வகையில் இருக்க வேண் டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.கிறிஸ்தவக் கல்வி நிலையங்களில், மாணவர்களை நல்வழிப் படுத்த இத்தகைய முறை சரியான வகையில் கையாளப்படுவதாகவும் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். கூட்டத்தின் இறுதியில் இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டன. அமெரிக்க பயணக் கட்டுரை குறித்த விமர்சனம் சமர்பிக்கப் பட்டது.தமிழ்க் கோட்டத்தில் அடுத்த கலந்தாய்வுக் கூட்டம் வரும் நவம்பர் 14ம் தேதி நடக்கிறது. இதில் இன்றைய மாணவ, மாணவியரின் ஆடை அணியும் முறை குறித்து க.ப.அறவாணன் தலைமையில் அறிஞர்கள் விரிவாக விவாதிக்கின்றனர். கூட்டம் சரியாக மாலை 5:30 மணிக்கு துவங்கி 7 மணியளவில் முடிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்