உள்ளூர் செய்திகள்

இ.எஸ்.ஐ., சார்பில் மருத்துவக் கல்லூரி

தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் (இ.எஸ்.ஐ.,) சார்பில், நாட்டில் 11 இடங்களில் மருத்துவக் கல்லூரிகள் துவங்கப்படும்,&' என மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மல்லிகார் ஜுன கார்கே தெரிவித்தார்.   இ.எஸ்.ஐ., சார்பில், நெல்லை வண்ணாரப்பேட்டையில் 50 கோடி ரூபாய் செலவில், 50 படுக்கைகளுடன் கூடிய புதிய மருத்துவமனை கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. அடிக்கல் நாட்டி அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது: இ.எஸ்.ஐ., சார்பில், நாட்டில் 11 இடங்களில் மருத்துவக் கல்லூரிகளும், 12 மருத்துவ பட்டய மேற்படிப்பு ஆராய்ச்சிக் கழகங்களும் துவங்கப்படும்.  அதில், ஒரு மருத்துவக் கல்லூரி கட்டடப் பணி, பாட்னாவில் நடக்கிறது. இ.எஸ்.ஐ., தொழிலாளர்கள் அதிகமுள்ள கோவையிலும் மருத்துவக் கல்லூரி துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. இ.எஸ்.ஐ., மூலம் 1.25 கோடி தொழிலாளர் குடும்பங்களின் ஐந்து லட்சம் பேர் பயன்பெறுகின்றனர். தமிழகத்தில், 55,984 நிறுவனங்களைச் சேர்ந்த 17 லட்சம் பேர் இ.எஸ்.ஐ., உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த 60 ஆண்டாக இத்திட்டம் சிறப்பாக செயல்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், தொழிலாளர் குடும்பங்கள் இலவச சிகிச்சை பெறுவதற்காக 144 ஆஸ்பத்திரிகளும், 1,400 மருந்தகங்களும் அமைக்கப் பட்டுள்ளன. திருப்பூரில், 50 படுக்கை வசதி கொண்ட இ.எஸ்.ஐ., ஆஸ்பத்திரி விரைவில் துவங்கப்படும். பீடித் தொழிலாளர்கள் ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்களைப்பெற முதலில் அவர்கள் தங்களது பெயர்களை பணிப் பதிவேட்டில் பதிவு செய்வது அவசியம். நிறுவன உரிமையாளர்கள், தொழிலாளர்கள், தொழிற் சங்கங்கள் இணைந்து செயல்பட்டால்தான் தொழிலாளர்கள் அனைத்து பயன்களையும் பெறமுடியும். இவ்வாறு அமைச்சர் கார்கே கூறினார். விழாவில், தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மைதீன்கான், நெல்லை எம்.பி., ராமசுப்பு, கலெக்டர் ஜெயராமன், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அரசுச் செயலர் பிரபாத் சி சதுர்வேதி, இ.எஸ்.ஐ., இயக்குனர் வத்வசா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்