பள்ளிகள் முழு நேரமாக இயக்கம்
புதுச்சேரி; ஓராண்டிற்கு பிறகு மீண்டும் புதுச்சேரியில் பள்ளிகள் முழு நேரமாக இயங்கத் துவங்கியுள்ளன.புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மார்ச் 3ம் தேதி முதல் முழு நேரமும் செயல்படும். வழக்கமான கால அட்டவணையை பின்பற்றி, வாரத்தில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை 6 நாட்கள் முழு நேர வகுப்புகள் நடத்தப்படும் என கல்வித் துறை அறிவித்தது.பள்ளிகளில் முழுநேர வகுப்பு தொடங்கினால் மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதால், அரசின் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பெற்றோர், ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.ஆனால், அறிவித்தபடி, புதுச்சேரியில் நேற்று ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகள் முழு நேரமாக செயல்பட துவங்கின. முககவசம் அணிந்து பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்து, உள்ளே அனுமதிக்கப்பட்டனர். வகுப்பறைகளில் சமூக இடைவெளியுடன் மாணவ மாணவியரை அமர வைத்து, பாடங்கள் கற்பிக்கப்பட்டன.கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கடந்தாண்டு மார்ச் மாதம் இறுதியில் புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. அக்டோபர் மாதம் முதல் பள்ளிகள் அரை நாள் மட்டுமே இயங்கின. ஓராண்டிற்கு பிறகு மீண்டும் புதுச்சேரியில் அரசு, தனியார் பள்ளிகள் முழு நேரமாக இயங்க துவங்கியுள்ளன. மாணவர்களுக்கு வருகை பதிவு இல்லை.