அரசு கட்டுப்பாட்டில் அண்ணா பல்கலை
அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பாவின் பதவிக்காலம் நிறைவு பெற்றது. இதையடுத்து, அரசின் நேரடி மேற்பார்வையில் பல்கலை நிர்வாகம் இயங்குகிறது.அண்ணா பல்கலை துணைவேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்த பேராசிரியர் சுரப்பா, 2018 ஏப்ரலில் நியமிக்கப்பட்டார். பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் இயக்குனராக பணியாற்றிய அனுபவம் பெற்ற, இவரது நியமனம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.சுரப்பா பதவியேற்றது முதல் அவருக்கு கடும் எதிர்ப்பும், விமர்சனங்களும் எழுந்தன. பல்கலையின் பேராசிரியர்கள், மாணவர்கள் என, பல்வேறு தரப்பினர், சுரப்பாவின் நிர்வாக சீரமைப்புக்கு எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து அறிக்கை விடுத்தனர்.இந்நிலையில் சுரப்பாவின் நிர்வாக காலத்தில் டெண்டர் விடுதல், பணி நியமனம் பதவி உயர்வு வழங்குதல் உள்ளிட்ட பணிகளில் 200 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளதாக தமிழக உயர்கல்வி துறைக்கு புகார்கள் சென்றன.இதுகுறித்த உண்மை நிலையை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் கமிட்டி அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த கமிட்டியினர், பல்கலையின் பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி மற்றும் அலுவலர்களிடமும், புகார் அளித்தவர்களிடமும் விசாரணை நடத்தினர். சுரப்பாவிடம் மட்டும் நேரில் விசாரணை நடத்தவில்லை. இந்த பரபரப்புக்கு இடையே, தன் மீதான விசாரணைக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சுரப்பா சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு சுரப்பா மீதான விசாரணை அறிக்கை மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்கப்பட்டது. அதேநேரம், ஆணையத்தின் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.இந்நிலையில் சுரப்பாவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிந்தது. எனவே, இன்று முதல் அண்ணா பல்கலை நிர்வாகம் தமிழக அரசு உயர் கல்வித்துறையின் நேரடி கட்டுப்பாட்டிற்கு வருகிறது. உயர்கல்வி துறை செயலர் தலைமையிலான குழுவினர், அண்ணா பல்கலையின் நிர்வாகத்தை கண்காணிக்க உள்ளனர். பல்கலையின் பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உள்ளிட்டோர், இனி அரசு அனுமதிக்கும் பணிகளை மட்டும் மேற்கொள்வர் என உயர்கல்வி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.