இடஒதுக்கீடு அடிப்படையில் பிஎச்.டி., அட்மிஷன்
அவர் இன்று (நவ., 18ம் தேதி) நிருபர்களிடம் கூறியதாவது:இந்தியாவில், உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை வெறும் 7 சதவீதம் மட்டுமே. மாநில அளவில் 15 சதவீதமாக உள்ளது. இந்நிலையில், ஆராய்ச்சி மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு அடிப்படையில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஆனால், உயர் படிப்பான ஆராய்ச்சி படிப்புகளுக்கு மட்டும் இடஒதுக்கீடு முறை கடைபிடிக்கப்படாதது வருத்தம் அளிக்கிறது. சென்னைப் பல்கலையில் பிஎச்.டி., படிப்பிலும் ஜாதி வாரியாக இடஒதுக்கீடு அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புகள் உள்ளன. எனினும், தமிழக அரசு அனுமதியுடன் இட ஒதுக்கீட்டு முறை நடைமுறைப்படுத்தப்படும். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தற்போது உள்ள 80 படிப்புகளுக்கும் தனித்தனியே பாடத்திட்டக்குழு உள்ளது. 98 சதவீதம் ஆசிரியர் அல்லாத துறை சார்ந்தவர்களைக் கொண்டு புதுமையான, துறை இணைப்புகளைக் கொண்ட படிப்புகளை வழங்குவதற்கான குழு துவக்கப்பட உள்ளது. மேலும், பல்கலைக்கழக செனட், கல்விக்குழுவின் ஒப்புதலுடன் தற்போதுள்ள பாடங்கள் மாற்றி அமைக்கப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்ட பாடங்கள் வழங்கப்படும். இதன்படி, வேலை வாய்ப்புகள் குறைவாக உள்ளதாக கருதப்படும் பி.ஏ., பி.எஸ்சி., பாடத்திட்டங்களில் மற்ற துறை பாடங்களும் இணைத்து வழங்கப்படும். உதாரணமாக, பி.ஏ., வரலாறு படிப்புடன், சுற்றுலா, ஹாஸ்பிட்டாலிட்டி, கம்ப்யூட்டர், கம்யூனிகேட்டிவ் இங்கிலிஷ், ஆர்க்கியாலஜி போன்ற பாடங்கள் வழங்கப்பட உள்ளன. வகுப்புகளில் செய்முறை படிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். வகுப்பின் 50 சதவீத நேரம் மாணவர்கள், ஆசிரியர் கலந்துரையாடலாக மாற்றப்படும். இதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு துணைவேந்தர் திருவாசகம் தெரிவித்தார்.