பள்ளி பஸ்களில் திடீர் சோதனை
பள்ளி பஸ்களில் அதிக குழந்தைகள் ஏற்றுவதாலும், அனுபவம் இல்லாத டிரைவர்களைக் கொண்டு இயக்குவதாலும் விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதை நெறிப்படுத்த சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல் அளித்தும், பள்ளி பஸ்கள் அதை பின்பற்றுவதில்லை. போக்குவரத்து ஆணையர் மச்சேந்திரநாதன் உத்தரவுப்படி, சென்னை வடக்கு இணைப் போக்குவரத்து ஆணையர் குணசேகரன் தலைமையில், அனைத்து வடக்கு சரக வட்டார போக்குவரத்து அலுவலர்கள் காலை 8 மணி முதல், பள்ளி பஸ்களை திடீர் தணிக்கை செய்தனர். இதில், 351 பள்ளி வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு, 72 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. தகுதிச்சான்று (எப்.சி.,) இன்றி ஓட்டியதற்காக ஒரு வாகனமும், அனுமதியின்றி ஓட்டியதற்காக மூன்று பஸ்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அதிக குழந்தைகளை ஏற்றியதற்காக நான்கு பள்ளி பஸ்களுக்கும், ஓட்டுனர் உரிமம் இல்லாதவரை பஸ் ஓட்ட அனுமதித்ததற்காக நான்கு பள்ளி பஸ்களுக்கும் சோதனை அறிக்கை வழங்கப்பட்டன. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படியும், மோட்டார் வாகனச் சட்ட விதிகளின்படியும், பள்ளி வாகனங்களை இயக்காவிட்டால், இந்த சோதனை தொடருமென, இணைப் போக்குவரத்து ஆணையர் குணசேகரன் தெரிவித்துள்ளார்.