கட்டணம் வழங்குவதில் இழுபறி நிலை
சென்னை: தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு நடப்பு ஆண்டுக்கான கல்வி கட்டணம் வழங்குவதில், இழுபறி நிலை உள்ளதாக பள்ளி நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் செயல்படும் தனியார் சுயநிதி பள்ளிகள் மற்றும் பிற பாடத்திட்ட சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., பள்ளிகள் போன்றவற்றுக்கான கல்வி கட்டணத்தை, தமிழக பள்ளிக்கல்வி துறை நிர்ணயம் செய்கிறது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், கல்வி கட்டணம் நிர்ணயம் செய்வதற்கு, தனியார் பள்ளி கல்வி கட்டண நிர்ணய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் சார்பில், ஓய்வுபெற்ற நீதிபதி பாலசுப்ரமணியன் தலைவராக இருந்து, கல்வி கட்டண மனு மீது விசாரணைகளை மேற்கொண்டு, அதன்படி உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இதன்படி, தமிழகம் முழுதும், 10,000க்கும் மேற்பட்ட பள்ளிகளில், கடந்த ஆண்டுடன் கட்டண நிர்ணயம் முடிந்த பள்ளிகள், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க விண்ணப்பித்துள்ளன. அவற்றுக்கு, கடந்த ஏப்ரல் மாதம் முதலே கட்டண நிர்ணயக்குழு விசாரணை நடத்தியது. சம்பந்தப்பட்ட பள்ளி தாளாளர்கள், முதல்வர்கள், பள்ளி நிர்வாகிகள் நேரில் ஆஜராகி, கட்டண நிர்ணய மனுவுக்கு எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளனர். இந்நிலையில், விசாரணை முடிந்த பல பள்ளிகளுக்கு, இன்னும் கட்டண நிர்ணய உத்தரவு வழங்காமல் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.கட்டண நிர்ணய உத்தரவுகளை பள்ளிகளுக்கு வழங்க, கட்டண நிர்ணயக்குழுவின் சிறப்பு அதிகாரி உள்ளிட்ட சில அலுவலர்கள் அனுமதிக்க வேண்டுமென்றும், அவ்வாறு அனுமதி வழங்குவதில் பல்வேறு நடைமுறைகள் உள்ளதாகவும், தனியார் பள்ளிகள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. அதனால், கல்வி ஆண்டு துவங்கி ஒரு மாதம் முடிந்த பிறகும், கல்வி கட்டணம் வசூலிக்க முடியாமல், பல கிராமப்புற பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த விவகாரத்தில் எந்த விதிமீறலும், தனி நபரின் அதிகார துஷ்பிரயோகமும் இல்லாமல், கட்டண நிர்ணய உத்தரவுகளை உடனடியாக பள்ளிகளுக்கு வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.