மருத்துவ கல்லுாரிகளுக்கு ஓராண்டு அங்கீகாரம்
சென்னை: அங்கீகாரத்தை புதுப்பிக்க விண்ணப்பித்த மருத்துவக் கல்லுாரிகள், கடந்தாண்டு எம்.பி.பி.எஸ்., இடங்களின் எண்ணிக்கையை போல் இந்தாண்டும் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.நாடு முழுதும் மருத்துவக் கல்லுாரிகளில் ஆய்வு நடத்திய தேசிய மருத்துவ ஆணைய குழுவினர், சில குறைபாடுகள் இருந்ததை சுட்டிக்காட்டினர். அதனால், தமிழகத்தில் மூன்று கல்லுாரிகள் உட்பட நாடு முழுதும், 140க்கும் மேற்பட்ட கல்லுாரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வது குறித்த நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆணையம் சுட்டிக்காட்டிய குறைகளை நிவர்த்தி செய்து, அங்கீகாரத்தை புதுப்பிப்பதற்கு சம்பந்தப்பட்ட கல்லுாரிகள் விண்ணப்பித்துள்ளன. இந்நிலையில், அங்கீகாரத்தை புதுப்பிப்பதற்கு விண்ணப்பித்த கல்லுாரிகள், கடந்தாண்டு இருந்த எண்ணிக்கையில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஆணையத்தின் இளநிலை மருத்துவ கல்வி வாரிய தலைவர் டாக்டர் அருணா வானிகர் அனுப்பிய சுற்றறிக்கை:அங்கீகாரம் நிலுவையில் உள்ள மருத்துவக் கல்லுாரிகளுக்கு, கடந்தாண்டு இருந்த நடைமுறைப்படி, எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஒருவேளை சட்டரீதியாக அங்கீகாரம் மறுக்கப்பட்டிருந்தால், அவற்றிற்கு ஆணையம் அனுமதி அளித்ததாக கருதக்கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.