உள்ளூர் செய்திகள்

முதுநிலை பாடப்பிரிவு இல்லை:பட்டதாரிகள் ஏமாற்றம்

சென்னை: பெரும்பாக்கம் அரசு கலைக்கல்லுாரி, 2016ம் ஆண்டு துவங்கப்பட்டது. தென்சென்னையின், அரசு கல்லுாரியாக இருப்பதால், ஏழை, நடுத்தர குடும்பங்களை சேர்ந்த மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.கல்லுாரி துவங்கிய போது, ஏழு பேர் மட்டுமே சேர்ந்தனர். தற்போது, மொத்தம், 1,200 பேர் படிக்கின்றனர். ஒவ்வொரு கல்வியாண்டிலும் 450 மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். மூன்று ஆண்டு இளநிலை படிப்பு முடித்து, தமிழ் 70, ஆங்கிலம் 70 வேதியியல் 60, கணிதம் 50, கணினி அறிவியல் 80, வணிகவியல் 120 பேர் என மொத்தம், 450 பேர் வெளியேறுகின்றனர். இவர்களில், கணினி அறிவியல், வணிகவியல் பாடப்பிரிவில், இதே கல்லுாரியில் முதுநிலை படிக்க, 70 சதவீதம் பேர் விரும்புகின்றனர். ஆனால், முதுநிலை பாடப்பிரிவுகள் இல்லாததால், இளநிலை படிப்புடன் கல்வி கனவை முடித்து, வேலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.மாணவியருக்கு, உயர்கல்வி படிக்க விருப்பம் இருந்தும், இளநிலையுடன் வீட்டில் முடங்கிவிடுகின்றனர். இக்கல்லுாரியில், முதுநிலை பாடத்திற்கு ஆண்டுக்கு, 800 ரூபாய் கட்டணம். அதுவே, தனியார் கல்லுாரிகளில், 50,000 முதல் 1 லட்சம் ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. இதனால், ஏழை, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மாணவ - மாணவியர் தனியார் கல்லுாரியில் சேர்ந்து, மேல் படிப்பு படிப்பதை தவிர்க்கின்றனர். இக்கல்லுாரியில் படிக்கும், 70 சதவீதம் பேர், கண்ணகி நகர், பெரும்பாக்கம், செம்மஞ்சேரி பகுதி நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பை சேர்ந்தவர்கள். இங்குள்ள, பெரும்பாலான குடும்பங்களில், ஐந்து ஆண்டுகளாக, முதல் தலைமுறை பட்டதாரிகள் உருவாகி வருகின்றனர். இவர்களுக்கு, மேல்படிப்பு படிக்க அரசு, தன்னார்வ அமைப்புகள் உதவி செய்ய முன்வந்தும், கல்லுாரியில் முதுநிலை பட்டப்படிப்பு இல்லாததால், படிப்பை பாதியில் நிறுத்துகின்றனர்.இது குறித்து, மாணவ - மாணவியர் கூறியதாவது:முதுநிலை, பிஎச்.டி., உள்ளிட்ட மேல்படிப்பு படிக்க விருப்பம் இருந்தும், முடியவில்லை. இளநிலை பட்டத்தோடு, வேலைக்கு செல்கிறோம். அதற்கு ஏற்ப தான், ஊதியம், பதவி கிடைக்கிறது. மேல்படிப்பு இருந்தால், உயர்ந்த நிலைக்கு செல்வதுடன், எங்கள் லட்சியத்தை நோக்கி பயணிக்க முடியும். பெரும்பாக்கம் கல்லுாரியில், முதுநிலை பாடப்பிரிவு ஏற்படுத்த வேண்டும் என, தொகுதி எம்.பி., அமைச்சர் மற்றும் முதல்வர் வரை மனு கொடுத்துள்ளோம். முதல்தலைமுறை பட்டதாரிகளான நாங்கள், இளநிலை பட்டப்படிப்போடு முடங்கிவிடாமல் மேல்படிப்பு படிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்