நாளை துவங்குகிறது எஸ்.ஜி.எப்.ஐ., தேர்வு
கோவை: எஸ்.ஜி.எப்.ஐ., எனப்படும் இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் சார்பில் நடக்கும் மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் மண்டல அணிக்கான தேர்வு, நாளை முதல் கோவையில் நடக்கிறது.எஸ்.ஜி.எப்.ஐ., சார்பில் ஆண்டுதோறும் பள்ளி மாணவ - மாணவியருக்கு மாநில மற்றும் தேசிய அளவில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில் இந்தாண்டுக்கான போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மாநில அளவில் நடக்கவுள்ள ஹேண்ட்பால், டென்னிஸ் மற்றும் இறகுப்பந்து போட்டிகளுக்கான மண்டல அளவிலான தேர்வு கோவையில், செப்., 1ம் தேதி முதல் செப்., 4ம் தேதி வரை நடக்கிறது.ஹேண்ட்பால் போட்டிக்கான தேர்வு நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் செப்., 1ம் தேதி மாணவியருக்கு, 2ம் தேதி மாணவர்களுக்கும் நடக்கிறது. இறகுப்பந்து தேர்வு காளப்பட்டி, வெங்கடேஷ் இறகுப்பந்து அகாடமியில், 2ம் தேதி மாணவியருக்கும், 4ம் தேதி மாணவர்களுக்கும் நடக்கவுள்ளது. இதேபோல், டென்னிஸ் மாணவர்கள் தேர்வு 4ம் தேதியும், மாணவியர் தேர்வு 2ம் தேதியும், உப்பிலிபாளையத்தில் உள்ள பெர்க்ஸ் ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்சில் நடக்கிறது.