பள்ளிகளில் தெலுங்கானா அதிகாரிகள் பார்வை
சென்னை: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டுள்ள, காலை உணவு திட்டத்தை சென்னை வந்துள்ள, தெலுங்கானா மாநில அதிகாரிகள், நேற்று பள்ளிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.தெலுங்கானா மாநில முதல்வரின் செயலர் ஸ்மிதா சபர்வால், பழங்குடியினர் நலத்துறை அரசு செயலர் கிறிஸ்டினா, கல்வித்துறை செயலர் கருணா வக்காட்டி, முதல்வரின் சிறப்பு பணி அலுவலர் பிரியங்கா வர்கீஸ். பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் துறை சிறப்பு செயலர் பாரதி ஹொல்லிக்கேரி ஆகியோர் நேற்றுமுன்தினம் சென்னை வந்தனர்.நேற்று சென்னை ராயபுரத்தில் உள்ள, மாநகராட்சி பள்ளி கட்டடத்தில் செயல்படும், காலை உணவு சமையல் கூடத்தை பார்வையிட்டனர். அங்கு சமையல் பொருட்கள் பெறப்படும் விதம்; பணியாளர்கள் பணியாற்றும் தன்மை; சுகாதாரமாக உணவு தயாரிக்கப்படும் முறை. தரப்பரிசோதனைகள் செய்யப்படும் விதம்; சமைக்கப்பட்ட உணவு வாகனத்தில் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்படும் முறை ஆகியவற்றை பார்வையிட்டனர்.அதன்பிறகு அருகில் ஆரத்துான் சாலையில் உள்ள, சென்னை மாநகராட்சி உருது துவக்கப் பள்ளிக்கு சென்றனர். அங்கு மாணவர்களுக்கு உணவு எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதை பார்வையிட்டனர். மாணவர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தனர். அடுத்து திருவள்ளூர் மாவட்டம், அழிஞ்சிவாக்கத்தில் உள்ள, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சென்றனர். அங்கு திட்டம் எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பதை பார்வையிட்டனர்.அவர்களுக்கு, காலை உணவு திட்டம் குறித்த விபரங்களை, தமிழக அரசின் காலை உணவு திட்ட ஒருங்கிணைப்பு அதிகாரி இளம்பகவத் விளக்கினார். சமூக நலத்துறை கூடுதல் கமிஷனர் கார்த்திகா, சென்னை மாநகராட்சி வடக்கு மண்டல துணை ஆணையர் சிவகுருபிரபாகரன், திருவள்ளூர் கூடுதல் கலெக்டர் சுகபுத்திரா ஆகியோர் உடன் சென்றனர். திருவள்ளூர் மாவட்டம், அழிஞ்சிவாக்கத்தில் உள்ள, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மாணவ, மாணவியருக்கு காலை உணவு வழங்கப்படுவதை, தெலுங்கானா அதிகாரிகள் குழு பார்வையிட்டது.