பள்ளி மாணவர்கள் கல்லுாரிக்கு களப்பயணம்
உடுமலை: உயர்கல்வி அனைவருக்கும் சாத்தியம் என்ற எண்ணத்தை உருவாக்க, பள்ளி மாணவர்கள், கல்லுாரிக்கு களப்பயணம் அழைத்துச்செல்லப்படவுள்ளனர்.மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, உயர்கல்வி வழிகாட்டுதல் மட்டுமின்றி, அச்சம் மற்றும் குழப்பங்களை களையும் வகையில், தமிழக அரசின் நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, உயர்கல்வி அனைவருக்கும் சாத்தியம் என்ற எண்ணத்தை உருவாக்க, கல்லுாரிக்கு களப்பயணம் அழைத்துச்செல்லும் நடைமுறை கடந்தாண்டு முதல் பின்பற்றப்படுகிறது.அதன்படி, தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியர் அருகில் உள்ள கல்லுாரிகளுக்கு அழைத்துச்செல்லப்படுவர். நடப்பாண்டுக்கான வழிகாட்டுதல் களப்பயணம் நாளை (25ம் தேதி) முதல், 28ம் தேதி வரை நான்கு நாட்கள் மேற்கொள்ள, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு, விரிவான வழிகாட்டுதல்கள் அனுப்பப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், மேல்நிலைப்பள்ளிக்கு, 35 பேர் தேர்வு செய்யப்பட்டு, சி.இ.ஓ., ஒப்புதலுடன் அரசு அல்லது அரசு உதவி பெறும் கல்லுாரிக்கு அழைத்துச் செல்லப்படுவர். அங்குள்ள வகுப்பறை, நுாலகம், உணவுக்கூடம், விடுதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பார்வையிட அனுமதிக்கப்படுவர், என்றனர்.