இளைஞர்கள் கையில் நாட்டின் வளர்ச்சி
இந்திய பட்டய கணக்கர் பயிற்சி நிலையத்தில் (ஐ.சி.ஏ.ஐ.,) சி.ஏ., படித்த மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா, நுங்கம்பாக்கத்தில் நடந்தது.இதில் பங்கேற்ற மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:நாட்டின் வளர்ச்சி, இளைஞர்கள் கையில் தான் உள்ளது. நாட்டில் சி.ஏ., படித்தவர்களின் தேவை அதிகமாக உள்ளது. மாணவர்களின் கல்வி மற்றும் திறமையை, நாட்டின் நலனுக்காக அர்ப்பணிக்க வேண்டும். உலகமே கணினியால் சுருங்கி விட்டது.போட்டிகள் நிறைந்த உலகில் வெற்றிக்கான வாய்ப்புகள் குறைவு தான் என்றாலும், தனக்கான சந்தர்ப்பத்தை மாணவர்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.நாம் தற்போது உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்ற இரு சகாப்தங்களுக்குள் வாழ்கிறோம். இங்கு வர்த்தகத்திற்கு எந்த எல்லையும் இல்லை. இளைஞர்கள் சொந்தமாக தொழில் செய்வதையே விரும்புகின்றனர். இந்த சூழலில், சி.ஏ., பட்டதாரிகளுக்கு பெரிய வாய்ப்புகள் உள்ளது.இளைஞர்கள் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு செயலாற்ற வேண்டும். மருத்துவம், பொறியியல் படிப்பிற்கு இணையாக கருதப்படுவது சி.ஏ., படிப்பு. நிதி, தொழில்நுட்பம் மற்றும் நிறுவனங்களின் முதலீடுகளில் ஏற்படும் விளைவுகளை ஆய்வு செய்யும் பணியையும், நிறுவனங்களுக்கு ஆலோசகர் என்று பல்வேறு பொறுப்புகள் உள்ளன. மனப் பக்குவத்துடன் பிரச்னைகளை எதிர்கொள்ளும் திறனை இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே பேசினார்.இந்நிகழ்ச்சியில் ஐ.சி.ஏ.ஐ., தலைவர் உத்தம் பிரகாஷ், மத்திய குழு உறுப்பினர் முரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.