உள்ளூர் செய்திகள்

நோபல் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு பத்மவிபூஷண்

மருத்துவம், இலக்கியம், அறிவியல், கலை, விளையாட்டு, சமூகசேவை உள்ளிட்ட  பல்வேறு துறைகளில்,  சாதனை படைத்தவர்களை கவுரவிக்கும் வகையில், நாட்டின்  மிகப் பெரிய விருதான பத்ம விருதுகள் வழங்கப்பட்டு  வருகின்றன. அந்த வகையில், குடியரசு தினத்தையொட்டி,  சாதனைப் படைத்தவர்களை  கவுரவிக்கும்  வகையில், நாட்டின் இரண்டாவது பெரிய விருதான பத்ம விபூஷண், பத்மபூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.நாட்டின் இரண்டாவது பெரிய விருதான  பத்மவிபூஷண் விருது, நோபல் பரிசு பெற்ற  விஞ்ஞானி வெங்கடராமன் ராமகிருஷ்ணன்  உட்பட ஆறு பேருக்கு  வழங்கப்படுகிறது.  அதுபோலவே, பத்மபூஷண் விருதுகள் இசையமைப்பாளர்கள் இளையராஜா, ரஹ்மான் உள்ளிட்ட  43 பேருக்கும், பத்மஸ்ரீ விருதுகள் சி.பி.ஐ., முன்னாள் இயக்குனர் கார்த்திகேயன் உள்ளிட்ட 81 பேருக்கும்  வழங்கப்படுகிறது.அதன் விவரம் வருமாறு:பத்மவிபூஷண்  விருதுகள்: அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் சிறப்பாக செயல்பட்ட விஞ்ஞானி வெங்கடராமன் ராமகிருஷ்ணன், மருத்துவத்துறையில் சிறப்பாக செயல்பட்ட டாக்டர் பிரதாப் சந்திர ரெட்டி மற்றும் ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் வேணுகோபால் ரெட்டி, கலைத்துறையில் ஆற்றிய சேவைக்காக மிருதங்க வித்துவான்  உமையாள்புரம் சிவராமன் மற்றும் இப்ராகிம் அல்காசி, ஜோரா சீகல் ஆகியோருக்கு பத்மவிபூஷண் விருதுகள் வழங்கப்படுகின்றன.பத்மபூஷண்: இசையமைப்பாளர்கள்  இளையராஜா, ரஹ்மான், நடிகர் அமிர்கான் மற்றும்  ராம்குமார், உஸ்தாத் சுல்தான் கான், மல்லிகா சாராபாய் ஆகியோருக்கு கலைத்துறையில் சிறப்பாக  செயல்பட்டதற்காகவும்,  அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் சிறப்பாக செயல்பட்ட விஞ்ஞானி ஆரோக்கியசாமி ஜோசப் பால்ராஜ்  உட்பட 43 பேருக்கு  பத்மபூஷண்  விருதுகள் வழங்கப்படுகின்றன.பத்மஸ்ரீ: நடிகை ரேகா, ராகவன் ஆகியோருக்கு கலைத்துறையிலும், சிவில் சர்வீஸ் துறையில் சிறப்பாக செயல்பட்ட கார்த்திகேயன், கல்வி மற்றும் இலக்கியத்தில் சிறப்பாக செயல்பட்ட அரவிந்த்குமார், கல்வித்துறையில் சேவையாற்றிய திருமதி ராஜலட்சுமி பார்த்தசாரதி, எழுத்தாளர் ரங்கநாதன் பார்த்தசாரதி (இந்திரா பார்த்தசாரதி), மருத்துவத்துறையைச் சேர்ந்த ரமணாராவ், ஜலகண்டாபுரம் ராமசாமி கிருஷ்ணமூர்த்தி, அகர்வால், கோபிநாத், அறிவியல் மற்றும் பொறியியல் துறையைச் சேர்ந்த சொர்ணசுந்தரம், விஜயலட்சுமி ரவீந்திரநாத், சமூக சேவையில் கங்காரமணி, விளையாட்டுத்துறையில் கார்பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன், பாட்மின்டன் வீராங்கனை சயினா நெக்வால், குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக், ஹாக்கி வீரர் இக்னேஸ் திர்கி மற்றும் தொழில்துறையில் மனோகரன், வேணுசீனிவாசன்  உட்பட 81 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்படுகின்றன. ஆனால்,மிகவும் உயரிய விருதான பாரத ரத்னா விருது ஒருவருக்கும் வழங்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.நோபல்  அறிஞர் நெகிழ்ச்சி: எனது பணிக்கு கிடைத்த அங்கீகாரம் நாட்டின் மிகப் பெரிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து விஞ்ஞானி வெங்கடராமன் ராமகிருஷ்ணன் கூறியதாவது: நான் பிறந்த நாட்டில் எனக்கு மிகப்பெரிய விருது வழங்கப்படுவது எனக்கு நெகிழ்ச்சியையும், கவுரவத்தையும்  ஏற்படுத்தியுள்ளது. எனது  பணிக்கு கிடைத்த அங்கீகாரமாக நான்  இதைக் கருதுகிறேன்  என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்