உள்ளூர் செய்திகள்

வேளாண் கருத்தரங்கில் கவர்னர் ரவி

தேனி: பிரதமர் மோடியின் வளர்ச்சி திட்டங்களால் நாடு விரைவில் பொருளாதாரத்தில் 3வது இடத்திற்கு செல்லும் என தேனி மாவட்டம் காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மைய கருத்தரங்கில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.இம்மையத்தின் சார்பில் நேற்று பெண் விவசாயிகள், தொழில்முனைவோர், மகளிர் சுய உதவிக்குழு அமைப்புகளுக்கான தொழில்நுட்ப கருத்தரங்கு நடந்தது. இதையொட்டி அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு கையேடுகள் வெளியிட்டு கவர்னர் பேசியதாவது:உள்நாட்டு உற்பத்தி, தனி நபர் வருமானத்தை பெருக்குவதன் மூலம் நாட்டின் ஏழ்மையை நீக்கலாம். தற்போது நாட்டில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு உணவு தானியங்கள் ஏற்றுமதியாகின்றன. பிரிட்டிஷ் அரசு நம் நாட்டின் பொருளாதாரத்தையும், விவசாயத்தையும் சீரழித்தது. அதையும் மீறி நாம் வளர்ச்சி அடைந்து வருகிறோம். நாட்டில் திட்டம் தீட்டுபவர்கள் மொத்த நிகர உற்பத்தி (ஜி.டி.பி.), வளர்ச்சிக்கான திட்டங்களை தீட்டியுள்ளனர்.நாடு வளர்ச்சி அடையவில்லை என்றால் நாட்டில் உள்ள பெண்கள், விவசாயிகள் வளர்ச்சி அடைய மாட்டார்கள். பிரதமர் மோடி அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி திட்டங்களை வகுத்துள்ளார். பொருளாதாரத்தில் 10வது இடத்தில் உள்ள நம் நாடு தற்போது 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. விரைவில் இது 3வது இடத்திற்கு முன்னேறும். இதுதான் குட் மாடல். நாட்டின் வளர்ச்சி, பிரதமரின் அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி திட்டத்தில் விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், ஏழைகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.தமிழகத்தில் தேனி ஏழ்மையான மாவட்டம். இந்தியாவில் பொருளாதாரத்தில் தமிழ்நாடு, மகாராஷ்டிராவிற்கு அடுத்து 2வது இடத்தில் உள்ளது. இங்கு தனிநபர் வருவாய் ரூ.2.75 லட்சத்திற்கு கீழ் உள்ளது. மதிப்பு கூட்டுதல் வேளாண் பொருட்கள் உற்பத்தி அதிகரிப்பதால் ஏழைகள் பயனடைவர். இதற்காக பிரதமர் நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளார். தமிழ்நாடு வேளாண் பல்கலை இந்தியாவிலேயே முதன்மையான நம்பர் ஒன் இடத்தை பெற்றது. புதிய ஆராயச்சிகளை கண்டுபிடித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்றார்.மையத்தின் தலைவர் பச்சைமால் வரவேற்றார். ஐதராபாத் வேளாண் தொழில்நுட்ப பயன்பாட்டு நிலைய இயக்குனர் ஷேக் என் மீரா, கோவை அவினாசிலிங்கம் பல்கலை துணைவேந்தர் பாரதிஹரிசங்கர், வேளாண் பல்கலை விரிவாக்க கல்விப்பிரிவின் இயக்குனர் முருகன் உள்ளிட்டோர் பேசினர்.கடின உழைப்பால் வாய்ப்புமுன்னதாக தேனி மேரி மாதா பப்ளிக் பள்ளியில் கவர்னர் ரவி மாணவர்களுடன் கலந்துரையாடினார். மாணவர் கேள்விகளுக்கு பதில் அளித்து அவர் பேசுகையில், சுய ஒழுக்கம், கடின உழைப்பு, உதவும் மனப்பான்மை உள்ளவர்களை வாய்ப்புகள் தேடி வரும். இது வாழ்வின் வெற்றிக்கான வழிகள். தினமும் ஒரு மணிநேரம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். சுயசரிதை புத்தகம் வாசித்தல் வெற்றி பெற ஊக்கமளிக்கும். தூங்கும் முன் இன்றைய தினத்தில் என்ன செய்தோம் என்று சிந்தியுங்கள். வாழ்வில் பெரிய இலக்கு வைத்து செயல்படுங்கள், என்றார். கவர்னரை கலெக்டர் சஜீவனா, எஸ்.பி., சிவபிரசாத், பள்ளி தாளாளர் ராபின் ஜேக்கப் வரவேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்