மலாய் மொழியில் தமிழ் செவ்விலக்கியங்கள்
சென்னை: தமிழ் செவ்விலக்கியங்களை, மலாய் மொழியில் மொழிபெயர்க்க, செம்மொழி தமிழாய்வு நிறுவனம் ஒப்புதல் அளித்ததை அடுத்து, மலேஷிய தமிழறிஞர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.இதுகுறித்து, மலேஷிய தமிழாய்வு நிறுவன தலைவரும், மொழிபெயர்ப்பாளருமான, பேராசிரியர் குமரன் கூறியதாவது:மலேஷியாவில், சீனர்கள், மலாய்க்காரர்கள், தமிழர்கள், சீக்கியர்கள், ஈபான், கடாசான் உள்ளிட்ட இன மக்கள் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர்.ஆறு தலைமுறைஅங்கு தமிழர்கள், 250 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆறு தலைமுறைகளாக வாழ்கின்றனர். மலேஷியாவில், 30 லட்சம் தமிழர்கள் உள்ளனர். இது, அந்நாட்டு மக்கள் தொகையில், 7 சதவீதம். அங்கு தொடக்கக் கல்விக்கு பின், மலாய் மற்றும் ஆங்கில மொழிகளே பாட மொழிகளாக உள்ளன.இங்கு அரசு நிதியுதவியுடன், 530 தமிழ் துவக்கப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், 90,000 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இதில், 12 வயது வரை தமிழ் கற்கலாம். அதன்பின், ஆங்கிலம் மற்றும் மலாய் மொழியில் மட்டுமே கல்வி கற்க முடியும்.கலை, பண்பாடு, மொழி, சமயம், பழக்க வழக்கங்கள், திருவிழாக்கள் ஆகியவற்றில், தமிழர்கள் தங்களுக்குள் பேசும் போது, தமிழின் தனித்த அடையாளத்தை கடைப்பிடிக்கின்றனர். அவர்களில் பலர், தமிழ் இலக்கியங்களை ஆய்வு செய்து, முனைவர் பட்டம் பெற முயற்சிக்கின்றனர்.அவர்களுக்கு தமிழ் வழியாக ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்கும் வசதி இல்லா ததால், அந்த முயற்சியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதைப் போக்க, மலாய் மொழியில் செவ்விலக்கியங்களை மொழி பெயர்த்தால், தமிழர்கள் மட்டுமின்றி, மற்ற மாணவர்களும் பயன்பெறுவர்.38 நுால்கள்இதை உணர்ந்து, செம்மொழி நிறுவனத்தை அணுகினோம்; பலன் கிடைத்தது. இதுவரை மொழிபெயர்க்கப்படாத, 38 செவ்வியல் நுால்களை மொழிபெயர்க்க, மலேஷிய தமிழ்ச்சங்கம் வாயிலாக, மலேஷிய- தமிழ் பேராசிரியர்களை ஈடுபடுத்த உள்ளோம். மொழிபெயர்ப்பு பணிகள் இன்னும் இரண்டு வாரங்களில் துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.