உள்ளூர் செய்திகள்

விடுமுறையில் நுாலகத்தில் சிறப்பு திட்டங்கள்

உடுமலை: விடுமுறையில், குழந்தைகளுக்கு நுாலகப் பயன்பாட்டை அதிகரிக்க, நுாலகத்துறை சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்மென ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, மூன்றாம் பருவம் நிறைவடைய சிறிது நாட்கள் மட்டுமே உள்ளது. குழந்தைகளுக்கு, வாசிப்புத்திறனை மேம்படுத்த வேண்டும், சமுதாயம் பற்றிய புரிதல், பொது அறிவு, வரலாறு மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தகவல்களை அறிந்து கொள்வதற்கும், நுாலகம் செல்லும் பழக்கம் அவசியமானது.குறிப்பாக துவக்கநிலை குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கம் மற்றும் கற்பனை திறன்களை மேம்படுத்த, நுாலகம் செல்வதை பல பள்ளிகளில் வழக்கமாக கொண்டுள்ளனர். முழு ஆண்டு விடுமுறை, நடப்பாண்டு லோக்சபா தேர்தலால் முன்னதாகவே துவங்குகிறது. நுாலகங்களில், நுாலகர் வாசகர் வட்டம், குழந்தைகள் வாசகர் வட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.அவற்றின் சார்பில், கதைசொல்லி, வாசிப்பை நேசிப்போம் போன்ற நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. இருப்பினும், அனைத்து நுாலகங்களிலும் இந்த நடவடிக்கைகள் நடைமுறையில் இருப்பதில்லை. குழந்தைகள், விடுமுறை நாட்களை நுாலகங்களில் செலவிட வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்த, நுாலகத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.முழு ஆண்டு விடுமுறை ஏப்., மாதம் துவங்கியதும், குழந்தைகளுக்கு பயனுள்ள வகையில், கிளை நுாலகங்களில், வாசகர் வட்டங்களின் செயல்பாடுகளை புத்துணர்ச்சி பெற செய்வது, சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளை நடத்தவும், நுாலகத்துறை உத்தரவிட வேண்டும்.மேலும், நடமாடும் நுாலக திட்டத்தையும் விரிவுபடுத்தும் வகையில் அனைத்து பகுதிகளுக்கும் செல்வதை உறுதிபடுத்த வேண்டும்.பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:நுாலகங்களில் வாசகர் வட்டம், குழந்தைகள் வாசகர் வட்டங்களின் சார்பில் நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஆனால் இவ்வாறு நடத்தப்படுவது பத்துக்கும் குறைவுதான். அனைத்து நுாலகங்களிலும் கோடை விடுமுறை சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.அவ்வாறு நிகழ்ச்சிகள் நடப்பதை, மாணவர்களுக்கு தெரியப்படுத்தி பயன்பெற செய்ய வேண்டும். நடமாடும் நுாலகம் உடுமலை சுற்றுப்பகுதியில் அதிகமாக வருவதே இல்லை. இத்திட்டத்தையும் புத்துயிர் பெறச்செய்ய வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்