தசைகள் குறித்த ஆய்வுக்கு காப்புரிமை
பாலக்காடு: பாலக்காட்டில் உள்ள அரசு உதவி பெறும், என்.எஸ்.எஸ்., பொறியியல் கல்லூரியின் ஆய்வுக்கு காப்புரிமை கிடைத்துள்ளது.கேரளா மாநிலம், பாலக்காடு அகத்தேக்கறையில், அரசு உதவி பெறும் என்.எஸ்.எஸ்., பொறியியல் கல்லூரி உள்ளது. தசைகளைப் புரிந்துகொள்வதற்கும், விளையாட்டு வீரர்களுக்கு பொருத்தமான விளையாட்டுகளைத் தேர்ந்தெடுப்பதற்கும், தசைகள் குறித்து படிப்பதற்கு விரைவான நுட்பத்தை உருவாக்கிய, இக்கல்லூரியின் ஆராய்ச்சியாளர்களுக்கு தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் காப்புரிமை கிடைத்துள்ளது.ஐ.ஐ.டி., சென்னையிலுள்ள பேராசிரியர் ராமகிருஷ்ணனின் துணையுடன், கல்லூரியின் கருவி மற்றும் கட்டுப்பாட்டு பொறியியல் துறை பேராசிரியர் வேணுகோபால் தலைமையில், ஆராய்ச்சி மாணவர்களான ரம்யா, திவ்யா ஆகியோர் ஆராய்ச்சி குழுவில் இடம் பெற்றுள்ளனர்.பேராசிரியர் வேணுகோபால் கூறியதாவது:தசையின் கட்டமைப்பைப் புரிந்து கொள்ளப் பயன்படுத்தப்படும் முறையானது, உடலில் ஒரு கீறலில் சேகரிக்கப்பட்ட தசையின் ஒரு பகுதியை பயாப்ஸி செய்வதாகும். இதற்கு செலவு அதிகம், மேலும், காலதாமதம் ஏற்படும்.அதனால், இத்தகைய அறிவியல் முறைகளை பொதுவாக யாரும் ஏற்றுக்கொள்வதில்லை. மாறாக, தோலில் இருந்து பெறப்பட்ட மின் சிக்னல்களின் மாறுபாடுகளின் அடிப்படையில், தசை அமைப்பு புரிந்து கொள்ள முடியும் வகையிலானது எங்களது தொழில்நுட்பம்.இந்த தொழில்நுட்பத்தால், குறைவான செலவில், முடிவை விரைவாக அறிந்த கொள்ளவும் முடியும். இத்தொழில்நுட்பம், விளையாட்டு அறிவியல், பிசியோதெரபி மற்றும் விளையாட்டு பயிற்சி துறைகளில் புரட்சியை ஏற்படுத்தும்.நரம்பியல் நோய்களின் விளைவாக தசை நார் வேறுபாடுகளை அடையாளம் காண, மருத்துவ அறிவியலில் இந்த தொழில்நுட்பம் ஏற்றுக்கொள்ளப்பட வாய்ப்புள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.