இன்போசிஸ் நிறுவனத்தில் தீவிர பணியெடுப்பு
இந்தியாவை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் பிரம்மாண்டமான ஐ.டி., நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ் நிறுவனத்தை பற்றி அறியாதவர்கள் வெகு சிலரே. இந்த நிறுவனம் இந்தக் கல்வியாண்டில் ஏற்கெனவே நாடெங்கும் உள்ள ஆயிரத்து நூறு கல்லூரிகளுக்கு கேம்பஸ் தேர்ச்சி முறைக்காக சென்றுவிட்டது. இதன் மூலம் 20 ஆயிரம் பேருக்கு அடுத்த ஆண்டு முதல் வருடம் 3.5 லட்ச ரூபாய் ஊதியத்தில் பணி புரிவதற்கான ஆணைகளையும் வழங்கிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இன்போசிஸ் நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதம் கடந்த காலாண்டில் 15.8 சதவிகிதத்திலிருந்து 17.1 சதவிகிதமாக உயர்ந்தது. இதனால் இந்த நிறுவனம் ஏற்கெனவே வரையறுக்கப்பட்ட பணி நியமன எண்ணிக்கையான 36 ஆயிரத்தை 40 ஆயிரமாக உயர்த்திவிட்டது. இந்த நிறுவனத்தில் ப்ரெஷர்ஸ் எனப்படும் புத்தம் புது இளைஞர்கள் அதிக அளவில் பணி நியமனம் செய்யப்படுவதால் இன்போசிஸ் நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதமும் கணிசமாகக் குறையும் என்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இதனால் பயிற்சியாளர்களையும் உள்ளிட்ட பயன்படுத்தும் விகிதம் 74.3 என்ற சதவிகிதத்திலிருந்து 73 சதவிகிதமாகவும் குறையும் என்று நம்பப்படுகிறது.