ஒப்புதல் கேட்டு விண்ணப்பித்துள்ள பதிப்பாளர்கள்
சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளுக்கு சப்ளை செய்ய உள்ள பாடப்புத்தகங்களுக்கு ஒப்புதல் கேட்டு 40க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் பள்ளிக் கல்வித்துறைக்கு விண்ணப்பித்துள்ளனர். நடப்பு கல்வியாண்டில் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பிற்கு சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட்டது. வரும் ஜூன் மாதம் இதர வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டம் அமலுக்கு வருகிறது. இதற்கான பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. மே முதல் வாரத்திற்குள் அச்சிடும் பணிகளை முடித்து, மே இறுதிக்குள் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ், அரசு நிர்ணயித்த குழுவினர் பாடத் திட்டங்களை உருவாக்கி உள்ளனர். அதை பின்பற்றி, பாடப்புத்தகங்கள் தயாராகி வருகின்றன. அரசு வகுத்த பாடத்திட்டங்களை பின்பற்றி தனியார் பதிப்பகங்களும் பாடப்புத்தகங்களை உருவாக்கி பள்ளிக் கல்வித்துறையின் ஒப்புதலைப் பெற்று தனியார் பள்ளிகளுக்கு வினியோகிக்கலாம் என சென்னை ஐகோர்ட் ஏற்கனவே தீர்ப்பு கூறியுள்ளது. அதை பின்பற்றி, தனியார் பதிப்பகங்களிடம் இருந்து, ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பு தவிர்த்து, இதர வகுப்புகளில் தமிழ்ப் பாடம் தவிர்த்து மற்ற பாடங்களுக்கு பாடப்புத்தகங்களை தயார்செய்து, பாடவாரியாக மூன்று பிரதிகளை அனுப்பி வைக்குமாறு பள்ளிக் கல்வித்துறை கேட்டுக் கொண்டது. இதற்கான காலக்கெடு கடந்த 5ம் தேதியுடன் முடிவடைந்தது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் கூறியதாவது, "நாற்பதுக்கும் மேற்பட்ட பதிப்பகங்கள், பாடவாரியாக புத்தகங்களை தயாரித்து, மாநில பொதுப்பள்ளி கல்வி வாரியத்தின் ஒப்புதல் கோரி, விண்ணப்பங்களை அனுப்பியுள்ளன. ஒவ்வொரு பாடத்திற்கும் மூன்று புத்தகங்கள் வீதம் ஏராளமான புத்தகங்கள் வந்துள்ளன. அவற்றை பிரித்து அரசு வகுத்த பாடத்திட்டங்களின் அடிப்படையில் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதா, தரமானதாக இருக்கிறதா என்பதை ஆராய வேண்டும். இதற்காக, பாடவாரியாக அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் அடங்கிய "சப்-கமிட்டி" அமைக்கப்படும். அக்குழுவினர், தனியார் பதிப்பகங்கள் அனுப்பிய புத்தகங்களை ஆய்வுசெய்து பள்ளிக் கல்வித்துறைக்கு பரிந்துரை செய்வர். அதன் பின், மாநில பொதுப்பள்ளி கல்வி வாரிய கூட்டம் கூட்டப்பட்டு, அதில் ஒப்புதல் வழங்கப்படும். அதன் பிறகே, சம்பந்தப்பட்ட பதிப்பாளர்கள் பாடப்புத்தகங்களை பள்ளிகளுக்கு வினியோகிக்க முடியும். தேர்தல் முடிந்ததும் புத்தகங்களை ஆய்வு செய்யும் பணி நடைபெறும். இம்மாத இறுதிக்குள்ளாகவோ அல்லது மே முதல் வாரத்திற்குள்ளாகவோ, தரமானதாக அடையாளம் காணப்படும் புத்தகங்களுக்கு மாநில பொதுப்பள்ளி கல்வி வாரியத்தின் ஒப்புதல் வழங்கப்படும்" என்று தெரிவித்தன. அரசு வகுத்துள்ள பாடத்திட்டங்களை பின்பற்றியே தனியார் பதிப்பாளர்கள் பாடப்புத்தகங்களை உருவாக்கி உள்ளனர். எனவே, இந்த பாடப்புத்தகங்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் எந்தவித பிரச்னையும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே முன்கூட்டியே ஒவ்வொரு பதிப்பகமும் தனியார் பள்ளிகளை அணுகி, "ஆர்டர்" பெறும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.