தமிழகத்தில் அடுத்த ஆண்டில் 10 இடங்களில் அகழாய்வு
சென்னை: தமிழகத்தில் அடுத்தாண்டு 10 இடங்களில் அகழாய்வு செய்ய, தமிழக தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது.திருவள்ளூர் மாவட்டம் பட்டறைபெரும்புதுார், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டி, தர்மபுரி மாவட்டம் பூதிநத்தம், அரியலுார் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம், புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை, சிவகங்கை மாவட்டம் கீழடி, திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஆகிய எட்டு இடங்களில், தமிழக தொல்லியல் துறையால், இந்தாண்டு அகழாய்வு செய்யப்பட்டது.கடந்த மாதம் முடிந்த இந்த அகழாய்வுகளில் கிடைத்த தொல்பொருட்களை ஆவணப்படுத்தி, முதல் நிலை அகழாய்வு அறிக்கை தயாரிக்கும் பணியில், அகழாய்வு இயக்குனர்கள் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, வரும் ஜனவரி முதல், 10 இடங்களில் அடுத்தகட்ட அகழாய்வுகளை துவங்க, தமிழக தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது.இதுகுறித்து, தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில் இந்தாண்டு எட்டு இடங்களில் அகழாய்வு செய்யப்பட்டது. அவற்றில், கங்கைகொண்ட சோழபுரம், கீழடி, பொற்பனைக்கோட்டையில் அடுத்தாண்டும் அகழாய்வை தொடர முடிவு செய்யப்பட்டுஉள்ளது.அதேநேரம், பட்டறை பெரும்புதுார், பூதிநத்தம், வெம்பக்கோட்டை, துலுக்கர்பட்டி உள்ளிட்ட இடங்களுக்கு பதில், அருகில் உள்ள வாழ்விடங்களை தேடும் பணி துவங்கி உள்ளது. அவற்றில் சில இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.அவற்றுக்கான கள ஆய்வு செய்து, அகழாய்வு இடங்களை உறுதி செய்ய உள்ளோம். அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் அடுத்தாண்டு, 10 இடங்களில் அகழாய்வு செய்ய திட்டமிட்டுள்ளோம். இடங்களை அடையாளப்படுத்திய பின், மத்திய தொல்லியல் துறையிடம் அனுமதி கோர உள்ளோம்.தமிழகத்தில் சங்க கால சோழர்களின் துறைமுகமான காவிரிபூம்பட்டினம் எனும் பூம்புகாரிலும், பாண்டியர்களின் துறைமுகமான கொற்கையிலும், அகழாய்வு செய்யும் திட்டம் உள்ளது.பூம்புகாரை பொறுத்தவரை, பழைய நகரமும், துறைமுகமும் கடலுக்குள் மூழ்கி விட்டன. அந்த கடல் பகுதி, ஆழமும், அலையும், அடர்த்தியும் அதிகம் உள்ள பகுதி. அதனால், அந்த பகுதியில் கடலாய்வுக்கான அனுமதி பெறுவதில், பல்வேறு சிக்கல்கள் உள்ளன.கொற்கையை பொறுத்தவரை, கடலுக்குள் இருந்த நிலப்பகுதி வெளியில் வந்து விட்டது. மேலும் அந்த பகுதி அடர்த்தியும் ஆழமும் குறைந்த பகுதியாக உள்ளதால், அங்கு இந்தாண்டு ஆழ்கடல் ஆய்வு செய்யும் திட்டம் உள்ளது.அதற்கு, மத்திய கடலாய்வு நிறுவனம், கடற்படை உள்ளிட்டவற்றின் அனுமதியையும், மத்திய தொல்லியல் துறையின் அனுமதியையும் கோர உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.