மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு ஜூலை 21ல் மருத்துவ முகாம்
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம், வட்டார வள மையங்களில் வரும் 21ம் தேதி துவங்குகிறது. மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ வெளியிட்ட அறிக்கை: மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு உள்ளடங்கிய கல்வி அளிப்பதில் உடல் மற்றும் மன அளவில் எந்தவித தடையும் இருக்கக் கூடாது என்பதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. நடப்பாண்டு திருச்சி மாவட்டத்தில் வரும் 21ம் தேதி முதல் ஆகஸ்ட் 2ம் தேதி வரை வட்டார வளமையங்களில் அரசு சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சையளிக்க உள்ளனர். மருத்துவ முகாமில் 6 முதல் 18 வயதுடைய அனைத்து மாற்றுத்திறன் குழந்தைகள் கலந்து கொள்ளலாம். மருத்துவ முகாமில் கலந்து கொள்ளும் குழந்தைகளின் தேவையை பொறுத்து, தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள் மற்றும் அறுவை சிகிச்சை போன்றவை இலவசமாக வழங்கப்படும். எனவே பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சுய உதவி குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் முகாமில் மாற்றுத்திறனுடைய குழந்தைகள் விடுபடா வண்ணம் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். ஜூலை 21ம் தேதி திருச்சி, பாலக்கரை, மரக்கடை அரசு சையது முர்துசா மேல்நிலைப்பள்ளி வளாகம் 22ம் தேதி மணப்பாறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 23ம் தேதி கோவில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, 24ம் தேதி முத்தரசநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளி, 25ம் தேதி சோமரம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, 26ம் தேதி லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் முகாம் நடக்கிறது. ஜூலை 28ம் தேதி திருச்சி, காட்டூர், அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 30ம் தேதி தொட்டியம், பாலசமுத்திரம், அரசு மேல்நிலைப்பள்ளி, 31ம் தேதி முசிறி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆகஸ்ட்1ம் தேதி துறையூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 2ம் தேதி மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் மருத்துவ முகாம் நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.