உள்ளூர் செய்திகள்

தேர்வு எழுதிய 2,898 மூத்த குடிமக்கள்

மேட்டுப்பாளையம்: மத்திய அரசின் புதிய பாரதம் எழுத்தறிவு திட்டத்தின் கீழ், காரமடை கல்வி வட்டாரத்தில் 2,898 பேர் கற்போர்களாக கண்டறியப்பட்டு, அவர்களுக்கு எழுத்தறிவு கற்பிக்கப்பட்டு, தேர்வு நடைபெற்றது.மத்திய அரசின் இத்திட்டத்தின் கீழ், 15 வயதுக்கு மேற்பட்ட எழுத்தறிவில்லாதவர்களுக்கு அடிப்படை கல்வி வழங்கப்படுகிறது. கோவை மாவட்டம், காரமடை கல்வி வட்டாரத்தில் சுமார் 595 கற்றல் மையங்கள் அமைக்கப்பட்டன.ஒவ்வொரு மையத்திலும் 20 பேர் கொண்ட குழுக்கள் பிரிக்கப்பட்டு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், அல்லது கற்போரின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள பொது இடங்களில், காலை அல்லது மாலை வேளைகளில், இரண்டு மணி நேர வகுப்புகள் தன்னார்வலர்கள், ஆசிரியர்களால் நடத்தப்பட்டன. பின், 2,898 பேருக்கு எழுத்தறிவு தேர்வு நடைபெற்றது.காரமடை வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் சுரேஷ் கூறியதாவது:அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், சேர்க்கை பெறும் மாணவர்களின் விண்ணப்பங்களில், யார் கையொப்பமிடாமல் கைரேகை வைக்கிறார்களோ, அவர்களை அடையாளம் கண்டு, ஆசிரியர்கள் கணக்கெடுப்பின் படி 2,898 பேருக்கு அடிப்படை எழுத்து பயிற்சி வழங்கப்பட்டது. இதில் மலைக்கிராமங்களில் பாட்டிகள், தாத்தாக்கள் படிக்க அதிக ஆர்வம் காட்டினர். அவர்களுக்கு 123 அரசு பள்ளிகளில் தேர்வு மையம் அமைத்து, தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகள் ஒரு மாதத்திற்குள் வெளியாகும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்