மதுரை பூரணம்மாள் மேலும் ரூ.3 கோடி நிலம் அரசு பள்ளிக்கு தானம்
மதுரை: மதுரையை சேர்ந்த பூரணம்மாள் 53, தன் மகள் நினைவாக அரசு பள்ளிக்கு ஏற்கனவே ரூ. 7 கோடி மதிப்பிலான நிலத்தை தானம் அளித்திருந்த நிலையில் மேலும் ரூ.3 கோடி மதிப்பிலான 91 சென்ட் இடத்தை அதே பள்ளிக்கு தானமாக வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.மதுரை சர்வேயர் காலனியை சேர்ந்த தம்பதி உக்கிரபாண்டியன்- பூரணம்மாள். இவர்களின் மகள் ஜனனி உயிரிழந்த நிலையில், அவர் நினைவாக கொடிக்குளம் கிராமம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு தனது சொந்த நிலம் 1.52 ஏக்கர் நிலத்தை பூரணம்மாள் தானமாக வழங்கினார். இதன் மதிப்பு ரூ. 7 கோடி. பள்ளி தரம் உயர்த்தப்படும்போது அந்த இடத்தில் வகுப்பறைகள் மட்டும் கட்டிக்கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தார். பூரணத்தம்மாளின் செயல்பாட்டிற்கு பலதரப்பில் இருந்து பாராட்டும், வாழ்த்துகளும் குவிந்தன. அவரை பாராட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் குடியரசு தினவிழாவில் சிறப்பு விருதும் வழங்கி கவுரவித்தார்.இந்நிலையில் அதே பள்ளிக்கு மேலும் 91 சென்ட் நிலத்தையும் தானமாக வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.இதன் வழிகாட்டி மதிப்பு ரூ.22.75 லட்சம். மார்க்கெட் மதிப்பு இது ரூ.3 கோடி வரை இருக்கும். இதுதொடர்பான தான செட்டில்மெண்ட் ஆவணங்களை முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகாவிடம் பூரணம்மாள் உறவினர்கள் முன்னிலையில் ஒப்படைத்தார்.பூரணம்மாள் மதுரையில் வங்கி ஒன்றில் பணிபுரிகிறார். இவரது கணவர் உக்கிரபாண்டியன் ஏற்கெனவே காலமாகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.