உள்ளூர் செய்திகள்

குரூப் - 4 விடைத்தாள் கையாண்டதில் குளறுபடி இல்லை: டி.என்.பி.எஸ்.சி.,

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடந்த, குரூப் - 4 விடைத்தாள்களை கையாண்டதில் குளறுபடி எதுவும் நடக்கவில்லை' என, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.கடந்த, 12ம் தேதி, 11 லட்சத்து 48,019 மையங் களில், டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வு நடந்தது . அதற்கான உத்தேச விடைக்குறிப்புகள், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில், நேற்று முன் தினம் வெளியிடப்பட்டன.அதில், ஆட்சேபனை இருந்தால் ஒரு வாரத்துக்குள் தெரிவிக்க, அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் மூன்று மாதங்களில் வெளியாகும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தேர்வு நாளில் சேலம் மாவட்டத்தில், விடைத்தாள்கள் அட்டைப் பெட்டிகளில் கொண்டு செல்லப்பட்டதாகவும், அதில் முறைகேடு நடந்ததாகவும், செய்திகள் வெளியாகின.இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப் பாட்டு அலுவலர் சண்முக சுந்தரம் வெளியிட்ட அறிக்கை:குரூப் - 4 விடைத்தாள்கள் இரும்பு பெட்டிகளில் சீலிடப்பட்டு, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டன. சேலத்திலும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டு, விடைத்தாள்கள் பாதுகாப்பாக வந்தடைந்தன.தேர்வுக்கூடத்தில் இருந்து, தேர்வாணைய அலுவலகம் வரும் வரை, சி.சி.டி.வி., கேமரா வாயி லாக கண்காணிக்கப் பட்டு, வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.அதாவது, தேர்வு கூடத்தில் இருக்கும் உபரி வினாத்தாள்கள், அட்டை பெட்டிகளில் வைத்து, மாவட்ட தலைநகரங்களில் வைக்கப்படுவது வழக்கம். அவை, மாவட்ட மைய நுாலகங்கள் மற்றும் கருவூலங்களுக்கு அனுப்பப்படும்.அவ்வாறு எடுத்து வரப்பட்ட அட்டை பெட்டிகளின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியதால், விடைத்தாள் சீலிடப்பட்ட பெட்டிகளில் எடுத்து செல்லப்படவில்லை என்ற, வதந்தி பரவியது. தவறு எதுவும் நடக்கவில்லை.இவ்வாறு அவர் கூறியுள்ளார். தேர்வை ரத்து செய்ய பழனிசாமி வலியுறுத்தல்அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் அறிக்கை: தேர்வு வினாத்தாளில் பல கேள்விகள், குறிப்பாக தமிழ் பாட கேள்விகள், பாடத் திட்டத்திற்கு அப்பாற்பட்டு இருந்ததாக, பல்வேறு தேர்வர்கள் புகார் தெரிவித்தனர். இந்நிலையில், தற்போது, சேலத்தில் இருந்து, சென்னைக்கு அனுப்பப்பட்ட, விடைத்தாள்கள் அடங்கிய பெட்டிகள், முறையாக சீலிடப்படாமல், ஆங்காங்கே உடைக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வருகின்றன. பல லட்சம் மாணவர்களின் கனவாக இருக்கக்கூடிய, 'குரூப் - 4' தேர்வை, முறையாக நடத்தி இருக்க வேண்டும். ஆனால், தி.மு.க., அரசு, மெத்தனப் போக்கின் உச்சத்தில், இந்த தேர்வை நடத்தி, தேர்வர்களின் வாழ்க்கையோடு விளையாடி உள்ளது; இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே, 12ம் தேதி நடந்த, 'குரூப் - 4' தேர்வு, ரத்து செய்யப்பட வேண்டும். உடனடியாக மறு தேர்வு வைக்க வேண்டும். 'குரூப் - 4' தேர்வு குளறுபடிகள் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்