மாவட்ட அறிவியல் கண்காட்சி 49 தலைப்புகளில் படைப்புகள்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி போட்டிகள் நேற்று நடந்தது. இதில், 26 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் கலந்து கொண்டன. கண்காட்சியில், 49 தலைப்புகளில், 94 மாணவ, மாணவியர் தங்களது படைப்புகளை காட்சிக்காக வைத்திருந்தனர். துவக்க விழாவில், முதுகலை ஆசிரியர் மகி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ் தலைமை வகித்தார். டி.இ.ஓ., (தனியார் பள்ளிகள்) கோபாலப்பா அறிவியல் கண்காட்சியை துவக்கி வைத்து பேசினார்.முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் பிரேம்குமார், கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதுகலை ஆசிரியர் காயத்ரி நன்றி கூறினார். அறிவியல் கண்காட்சி போட்டியில், பால் பண்ணை கழிவுநீரை நுண்ணுயிர் நொதித்தல் மூலம், எத்தனாலாக மாற்றுதல், இயற்கை மேலாண்மை, மழை நீர் சேகரிப்பு, மாடித்தோட்டம், திடக்கழிவு மேலாண்மை, உயிர் உரம் தயாரித்தல் உள்ளிட்ட தலைப்புகளில், தங்களது படைப்புகளை, மாணவர்கள் காட்சிப்படுத்தி இருந்தனர்.