உள்ளூர் செய்திகள்

கல்வி வளர்ச்சிக்காக ரூ 50 ஆயிரம் கோடி: அமைச்சர் சக்கரபாணி

ஒட்டன்சத்திரம்: தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக ரூ. 50 ஆயிரம் கோடிக்கும் அதிகமான நிதியை முதலமைச்சர் ஒதுக்கி உள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசினார்.ஒட்டன்சத்திரம் நகராட்சியில் பொதுமக்கள் விபத்து இன்றி சாலையை கடக்கும் வகையில் நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.14 கோடி மதிப்பீட்டில் நகரும் படிக்கட்டுகளுடன் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ஒட்டன்சத்திரம் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஜி.ஆர்.பி. நிறுவனம் சார்பில் ரூ. 85 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை திறந்து வைத்தும், விருப்பாச்சியில் இலங்கைத் தமிழர் முகாமில் ரூ.5.50 கோடி மதிப்பீட்டில் 80 புதிய வீடுகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.கொத்தையம் ஊராட்சியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்து கொண்டு உடனடியாக தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கு உத்தரவுகளை வழங்கிய அவர் பேசுகையில், தமிழகத்தில் உயர் கல்வித் துறை ,பள்ளி கல்வித்துறைக்காக இந்த ஆண்டு ரூ. 50 ஆயிரம் கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்து ஆண்டுதோறும் மாணவர்களுக்கு எண்ணற்ற திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார். இந்தாண்டு பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு 20 லட்சம் லேப்டாப்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார், என்றார்.ஆர்.டி.ஓ., கண்ணன், தாசில்தார் சஞ்சய் காந்தி, நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் குமணன்,உதவி கோட்ட பொறியாளர் விஜயகுமார், உதவி பொறியாளர் இளவரசு, நகராட்சித் தலைவர் திருமலைசாமி, துணைத்தலைவர் வெள்ளைச்சாமி, நகராட்சி கமிஷனர் ஸ்வேதா, ஜி.ஆர். பி நிறுவனர் பாலசுப்பிரமணியம், கூட்டுறவு சங்க தலைவர் ராஜாமணி, தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், ஒன்றியச் செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜன், பாலு, தங்கம், துணைச் செயலாளர்கள் முருகானந்தம், ராஜ்குமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் அசோக் வேலுச்சாமி , தண்டபாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்