உயர்கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை 52 சதவீதம்
பெரம்பலுார்: இந்தியாவிலேயே தமிழகத்தில் தான், உயர்கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை 52 சதவீதமாக உள்ளது என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில், பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா, நேற்று, அரியலுார் மாவட்டம், செந்துறை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது:பள்ளி மாணவ, மாணவியரின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில், தமிழக முதல்வர், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மாணவர்கள் கல்வி கற்பதற்கு, பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதில், பெற்றோர்களுக்கு இணையாக, தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக, தமிழகத்தில் மட்டுமே இது போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.தமிழகத்தில், முதல்வராக இருந்த காமராஜர் அதிக பள்ளிகளை திறந்தது போல், கருணாநிதி முதல்வராக இருந்த போது, அதிக கல்லுாரிகள் மற்றும் பல்கலை கழகங்களை நிறுவி, சாதனை படைத்தார். அதனால், தமிழகத்தில் உயர்கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.இந்தியாவிலேயே, தமிழகத்தில் தான் உயர்கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை, 52 சதவீதமாக உள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத அரசு இடஒதுக்கீட்டில், மருத்துவப் படிப்பிற்கான தேர்வு பட்டியலில், அரியலுார் மாவட்டம், உடையார்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி அன்னபூரணி 7ம் இடத்தையும், பெரம்பலுார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் புகழேந்தி 8ம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார்.