அரசு பணித் தேர்வு: 64 சதவீதம் பேர் ஆப்சென்ட்
கோவை: ஜூலை 3 கோவையில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சேம நலநிதிப்பணி அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வில், 64 சதவீதம் பேர் ஆப்சென்ட் ஆகினர். மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் அமலாக்க அதிகாரி, கணக்கு அதிகாரி பணியிடங்களுக்கான சேமநல நிதிப்பணி தேர்வு கோவையில் நேற்று எட்டு மையங்களில் நடத்தப்பட்டது.காலை நடந்த தேர்வுக்கு 3,903 பேருக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டிருந்தது. இதில், 1,470 பேர் மட்டுமே தேர்வுக்கு வந்திருந்தனர். மதிய வேளை தேர்வுக்கு 3,913 பேருக்கு ஹால் டிக்கெட் வழங்கியிருந்தனர். அவர்களில் 1,414 பேர் மட்டுமே வந்திருந்தனர். மொத்தம் 7,816 பேருக்கு ஹால் டிக்கெட் வழங்கியிருந்த நிலையில்,2,884 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 4932 பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். விண்ணப்பதாரர்களில் 64 சதவீதம் பேர் தேர்வுக்கு வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.