உள்ளூர் செய்திகள்

ஒன்றரை ஆண்டில் 72 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

விருதுநகர்: பட்டாசு, தீப்பெட்டி, அச்சகம், காலண்டர், பருப்பு, எண்ணெய் மில்கள், நுாற்பாலைகள், பேண்டேஜ் ஆலைகள் என தொழில் வளம் நிறைந்த மாவட்டமாக விருதுநகர் மாவட்டம் உள்ளது. இத்தனை தொழில்கள் இருந்தும் முன்பு தொழிலாளர்கள் வறுமையான சூழலிலே இருப்பதால் தங்கள் குழந்தைகளை படிக்க அனுப்பாமல் வேலைக்கு அனுப்புவது வாடிக்கையாக இருந்தது.இதை கண்டறிந்து 1980 முதல் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அன்று குழந்தை தொழிலாளர்களாக இருந்த பலர் இன்று ரயில்வே லோகோ பைலட், அரசு பள்ளி ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு நல்ல நிலைக்கு முன்னேறி உள்ளனர்.மாவட்ட நிர்வாகம், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஒவ்வொரு ஆண்டும் குழந்தை, வளரிளம் பருவ தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் கல்வி பயில செய்து வருகின்றனர்.விருதுநகர் மாவட்டத்தில் 2023 ஜனவரி முதல் 2024 ஏப்ரல் வரை 72 குழந்தை, வளரிளம் பருவ தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். நீதிமன்றத்தில் இருந்த 18 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.5.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் முன்னிலையில் 56 வழக்குகள் முடிக்கப்பட்டு 4.85 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.தற்போது கோடை விடுமுறை என்பதால் இந்த நேரங்களிலும் குழந்தை, வளரிளம் பருவ தொழிலாளர்களை பணிக்கு அமர்த்த வாய்ப்புள்ளது. அதிகாரிகள் இதையும் கண்காணிக்க வேண்டும். மாவட்டத்தில் இத்தனை விழிப்புணர்வு வந்த பின்னும் குழந்தை தொழிலாளர்கள் உருவாவது ஏன் என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.தொழிலாளர் உதவி ஆணையர் மைவிழி செல்வி கூறியதாவது: விடுமுறை தினங்களில் மாணவர்கள், சிறுவர்களை கடைகள், மில், ஆலைகளில் பணிக்கு அமர்த்துவதை கண்காணித்து வருகிறோம். அவ்வாறு யாரேனும் பணிக்கு அமர்த்தியது மக்களுக்கு தெரிந்தால் சைல்டு லைன் 1098, மாநில புகார் எண் 155214, தொழிலாளர் துறைமாவட்ட அலுவலக எண் 04562 252130 ஆகிய தொலைபேசி எண்களில் புகார் அளிக்கலாம்.குழந்தையை பணிக்கு வைத்தவருக்கு தண்டனை வழங்குவது போல், அதை கண்டுக்காமலோ அல்லது வேண்டும் என்றே பணிக்கு அனுப்பிய பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாவட்டமாக மாற தேவையான அனைத்து முயற்சி, நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்