தமிழகத்தில் பி.எட் தேர்வில் 80 சதவீத தேர்ச்சி
தமிழகத்தில் பி.எட் தேர்வில் 80 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளதாக தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக் கழக பதிவாளர் வீரமணி தெரிவித்தார். நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பி.எட் கல்லூரிகளின் முதல்வர்களுடன் ஆலோசனை கூட்டம் பாளை சேவியர் கல்வியியல் கல்லூரியில் நடந்தது. இதில் தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக் கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஜெயக்குமார் பேசியதாவது: தமிழகத்தில் பி.எட் கல்லூரி மாணவ, மாணவிகள் சுமார் 75 ஆயிரம் பேரின் விடைத்தாள்களை பேராசிரியர்கள் மிக கவனமுடன் திருத்த வேண்டும். ஒரு சில மார்க்குகளில் மாணவர்கள் பெயில் ஆவதை தடுக்க வேண்டும். சென்னையில் எம்.எட் தேர்வு விடைத்தாள் திருத்த போதுமான பேராசிரியர்கள் வரவில்லை. தற்போது நடந்து முடிந்த பி.எட் தேர்வில் 80 சதவீத பேரும், எம்.எட் தேர்வில் 65 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர். பி.எட் கல்லூரிகளில் அக மதிப்பீட்டு மார்க் பட்டியலை சரியான முறையில் குறிப்பிட்டு பல்கலைக் கழகத்திற்கு அனுப்ப வேண்டும். தமிழகத்தில் முன்னோடி பல்கலைக் கழகமாக தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக் கழகம் மாற அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பேசினார். இதில் பல்கலைக் கழக பதிவாளர் வீரமணி பேசியதாவது:தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பி.எட் தேர்வில் மாணவ, மாணவிகள் அதிகம் பேர் தேர்ச்சி பெறவில்லை. விடைத்தாள்களை கவனமுடன் பேராசிரியர்கள் திருத்த வேண்டும். பி.எட் முடித்தவர்கள் அந்தந்த கல்லூரிகளிலேயே ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை மேற்கொள்ளலாம். பி.எட் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை முறையாக நடத்த வேண்டும். அரசு விதிமுறைகளை மீறிய 6 கல்லூரிகளின் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. உரிய கல்வித் தகுதி, தேர்ச்சி சதவீதம், குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் மாணவ, மாணவிகளின் சேர்க்கையை அனுமதிக்க வேண்டும். முறையாக எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2 படிக்காமல் நேரிடையாக திறந்த வெளி பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்றவர்களை பி.எட் படிப்பில் சேர்க்க கூடாது. அனைத்து பி.எட் கல்லூரிகளிலும் ஒரு கல்வி ஆண்டில் 180 நாட்கள் வேலை நாட்களாக செயல்படுத்த வேண்டும். ஒரிரு மார்க்குகளில் பி.எட், எம்.எட் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் உரிய ஆதாரங்களுடன் பல்கலைக் கழகத்தை அணுகினால் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பதிவாளர் பேசினார். பி.எட் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு கல்வித் தகுதி பதிவு செய்வது தொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் லட்சுமி நாராயணன் விளக்கமளித்தார்.