ஓவியமும், யோகாசனமும்... அசத்தும் 86 வயது இளைஞர்
பார்த்ததை பார்த்தபடி வரைவது, ஓவியக்கலைஞர்கள் மட்டுமே பெற்றுள்ள வரம். அதிலும், பார்த்த சில நிமிடங்களில் அச்சடித்தாற்போல், அதே உருவத்தை கண் முன் நிறுத்துவது, தேர்ந்த கலைஞர்களுக்கே உரித்தான தனிச்சிறப்பு.ஆம். இவர், சில நிமிடங்கள் மட்டுமே பார்ப்பார்; அடுத்த சில நிமிடங்களில் அந்த உருவம் அப்படியே ஓவியமாய் நம் கண்முன் விரியும். ஏகலைவன் சுயமாய் வில் வித்தை கற்றது போல், தன், 5ம் வயதில், சுயமாய் ஓவியம் வரையத் துவங்கி, ஆயிரக்கணக்கான உயிர் ஓவியங்களை வரைந்து தள்ளியுள்ளார். ஓவியக்கலையுடன், 44 வகை யோகாசனங்களையும் நேர்த்தியாக செய்யும் வேதாந்த தேசிகனுக்கு வயது, 86. மதுராந்தகத்தை சேர்ந்த இவர், தற்போது, சென்னை மடிப்பாக்கத்தில் வசிக்கிறார்.அந்த கால பட்டப்படிப்பில், &'சைக்காலஜி&' படித்துள்ளார். 12வது வயதில், திருவண்ணாமலை மகான், ரமண மகரிஷியை சந்தித்து, அவரது மடியில் அமர்ந்து ஆசி பெற்ற பாக்கியவான்; ஓவிய மாமணி விருது பெற்றவர் வேதாந்த தேசிகன்.தன் ஓவியம் வரையும் ஆர்வம் குறித்து, வேதாந்ததேசிகன் கூறியதாவது:பள்ளி படிப்பை மதுராந்தகத்திலேயே முடித்தேன். அப்புறம் மவுன்ட்ரோடு, ஸ்பென்ஷர் பிளாசா எதிரில் உள்ள கல்லுாரியில் சைக்காலஜி படித்தேன். அந்தக்காலத்தில் படிப்புடன், தச்சுக்கலை, சிற்பக்கலை, ஓவியம், கட்டுமானம், ஆடல், பாடல் என, ஏதேனும் ஒன்றை விருப்ப பாடமாக தேர்வு செய்து கற்க வேண்டியது அவசியம். சிறு வயது முதலே ஓவியத்தில் ஆர்வம் இருந்ததால், அதில் அதிக கவனம் செலுத்தினேன். கண்ணில் பட்டதை, கவனத்தை ஈர்த்ததை எல்லாம் வரைவேன். அசலுக்கும், ஓவியத்திற்கும் வித்தியாசம் தெரியாத வகையில் அமையும் வரை விடமாட்டேன். தொடர்ந்து பயிற்சி செய்து, ஓவியம் மீதான என் தாகத்தை தீர்க்க முயன்றேன். இதுவரை, 1,500க்கும் மேல் ஓவியங்கள் வரைந்திருக்கிறேன். அத்துடன், 1963லிருந்து, யோகாவும் கற்றுக் கொண்டேன். பெங்களூரு சுந்தரம் தான் குரு. அவரிடமிருந்து, 44 வகையான யோகாசனம் கற்றுக் கொண்டேன். சிறு வயதில், ரமண மகரிஷியின் ஆசிர்வாதம் கிடைத்தபோது, அவரை மார்பளவு வரைந்து கொடுத்தேன்.காஞ்சி பெரியவரையும் வரைந்து கொடுத்து ஆசி பெற்றேன்.கண்ணில் பட்டதை காகிதத்தில் கொண்டு வருவது கடவுளின் ஆசி. 86 வயதிலும், ஓவியம் வரைவதையும், யோகாசனங்கள் செய்வதையும் நிறுத்தவில்லை. தினமும் அரைமணி நேரம் நடை, சில யோகாசனங்கள், பிராணாயாமம், சூரிய நமஸ்காரம், மாதம் இரு தினங்கள் முழு விரதம். இதை செய்தாலே, உடலும், மனமும் ஆரோக்கியமாய் இருக்கும் என்று சொல்லி முடித்தார், வயது முதிர்ந்த இளைஞர்.கலைவாணி அருளுக்கு காசு எதற்கு?முன்னாள் முதல்வர் ராஜாஜியிடம், &'பர்சனல்&' காரியதரிசியாக, எட்டு மாதம் வேலை பார்த்தது மறக்க முடியாதது. அப்புறம் ஏ.ஜி.எஸ்., ஆபீசில் உத்யோகம். ரிடயர்டு ஆன பிறகு, ஓவியமும், யோகாவும் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தேன். அதற்கு, நான் வாங்கிய குரு தட்சணை, 1 ரூபாய் மட்டுமே. 500க்கும் மேற்பட்டோர் என்னிடம், ஓவியம், யோகா பயின்றுள்ளனர். எனக்கு தெரிந்ததை பிறருக்கு கற்றுத்தர, காசு வாங்கக்கூடாது என்பது என் கொள்கை. நான் யாரிடமும் பணம் கொடுத்து கற்காதததை, நான் மட்டும் ஏன் பணம் பெற்று கற்றுத்தர வேண்டும். கலைவாணி அருள் அனைவருக்கும் பொதுவானது என்பது என் நம்பிக்கை.